சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றுவோருக்க அதிகபட்சமாக ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும். சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 கி.மீ தூரத்திற்குள் வேலை வழங்கப்படும். 15 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்தப்படும். வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு நீல நிற அட்டை வழங்கப்படும்.
தமிழகத்தின் இத்தகைய தனித்துவமான செயல்பாட்டினை மத்திய அரசு பாராட்டியதோடு இதர பிற மாநிலங்களும் பின்பற்ற செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.