ஓஎல்எக்ஸ் (OLX) தளத்தில் விற்பனைக்காக விளம்பரம் செய்யப்பட்ட கார் ஒன்றை டெஸ்ட் டிரைவ் முறையில் ஓருவர் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓஎல்எக்ஸ் இணைய தளம் மூலம் வாகனங்கள் முதல் அனைத்தும் வாங்கலாம், விற்கலாம். அந்தத் தளத்தில், பெங்களூரைச் சேர்ந்த ரவீந்திரா எல்லூரி என்பவர் தன்னிடம் உள்ள காரை விற்பனை செய்யும் நோக்கில் விளம்பரம் செய்துள்ளார். அதற்கு சுமார் ஐந்து பேர் பதில் கொடுத்துள்ளனர்.
அதில் ஒருவர் தான் எம்.ஜி.வெங்கடேஷ் நாயக். ஆனால், அவர் குறித்த எந்த விவரமும் ரவீந்திரா அறிந்திருக்கவில்லை. கடந்த ஜனவரி 30 அன்று மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டுள்ளார் நாயக். காரை வாங்க விரும்புவதாகவும், டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டுமெனவும் சொல்லியிருக்கிறார்.
அதன்படி அவரிடம் கார் சாவியை அன்றைய தினமே கொடுத்து டெஸ்ட் டிரைவ் செய்ய ரவீந்திரா அனுமதித்துள்ளார். ஆனால், வெகுநேரம் கடந்தும் காரை அவர் கொண்டு வரவில்லை. அந்தகொடுத்த எண்ணை அழைத்தப்போதும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ரவீந்திரா, போலீசில் அன்றே புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் அவர் கொடுத்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த போன் வேறு ஒரு நபரிடமிருந்து திருடப்பட்டது என முதலில் கண்டறிந்துள்ளனர்.
பின்னர் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட ஐபி அட்ரஸ்களை டிராக் செய்து நாயக்கை கடந்த 10ஆம் தேதி கைது செய்துள்ளனர். அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2020-இல் தனது மனைவி கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டதாகவும், அதனால் தான் கடனாளி ஆகிவிட்டதாகவும், அந்தக் கடனை அடைக்கவே திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
newstm.in