மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் ஊரக காவல் துறைக்கான பெண் காவலர் தேர்வு கடந்த 2018-ல் நடந்தது. இதில் எஸ்சி பிரிவில் பெண் ஒருவர் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண் ணுக்கு கருப்பை இல்லை என்பதும் அவரது உடலில் ஆண், பெண் குரோமோசோம்கள் உள்ளதும் தெரிந்தது.
இதையடுத்து அந்த பெண் ணுக்கு, ‘ஆண்’ என மருத்துவ சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதனால் இவரது தேர்வு ரத்தானது. இதை எதிர்த்து அந்த பெண் மும்பை நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், ‘‘உடலில் உள்ள குரோமோசோம் மாறுபாடு பற்றி நான் அறியவில்லை. நான் பிறந் தது முதல் பெண்ணாகத்தான் வளர்ந்தேன். எனது அனைத்து கல்வி சான்றிதழ்களிலும் பெண் பெயரில்தான் உள்ளன. குரோமோ சோம் மாறுபாட்டை காரணம் காட்டி வேலை வாய்ப்பை மறுக்க முடியாது’’ என கூறியிருந்தார்.
இந்த வழக்கில் மகாராஷ்டிர அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது. கருணை அடிப்படையில் இந்தப் பெண்ணை காவல் துறையில் பணியமர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் பெண் காவலராக அவர் பணியமர்த்தப்பட மாட்டார். காவல் துறையில் வேறு பணியில் ஈடுபடுத்த சிறப்பு ஐஜி, மாநில உள்துறை செயலாளருக்கு பரிந் துரை செய்வார். அவருக்கு மற்ற ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும். இவ்வாறு மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் ரேவதி மொஹிதி தேரே மற்றும் மாதவ் ஜாம்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘‘இது முற்றிலும் துரதிர்ஷ்டமான வழக்கு. அவர் ஆரம்பம் முதல் பெண்ணாக வளர்ந்துள்ளார். அவர் மீது எந்த தவறும் இல்லை. அவருக்கு 2 மாதத்துக்குள் பணி வழங்க வேண்டும்’’ என்று கூறினர்.