புதுடெல்லி:
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் அந்தந்த மாநில மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது. இதன்படி தமிழகத்துக்கு மக்களவையில் 39 பேருக்கும், மாநிலங்களவையில் 18 பேருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் காலி இடங்களை நிரப்புவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கையை வெளியிடும் நாள் மற்றும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள் மே 24-ம் தேதி.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 31-ம் தேதி.
வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் நாள் ஜூன் 1-ம் தேதி.
வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் ஜூன் 3-ம் தேதி.
வாக்குப் பதிவு நாள் ஜூன் 10-ம் தேதி.
வாக்குப் பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் ஜூன் 10-ம் தேதி.
தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் ஜூன் 13-ம் தேதி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…நிலச்சரிவில் சிக்கி தரைமட்டமான வீடு- 2 பேர் உயிரிழப்பு