அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரத்தில் உள்ள ஒரு பாலத்தில் விமானம் கார் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானது.
சனிக்கிழமையன்று ஒரு தனியார் விமானம் மியாமி நெடுஞ்சாலை பாலத்தில் ஒரு SUV கார் மீது மோதிய பின்னர் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் இறந்தார். இந்த பயங்கர வீடியோ கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிறிய விமானம் தரைமட்டமாகி சாலையின் நடுவில் எரிந்து, அடர்ந்த கறுப்புப் புகையை வெளியேற்றுவதை வீடியோ காட்டுகிறது. மேலும் அந்த வீடியோவில், ஒரு சேதமடைந்த எஸ்யூவி சிறிது தொலைவில் உள்ளது.
Awful private plane crash in #mia @nbc6 pic.twitter.com/LjJg7bgUtM
— Alex H (@lexSayzzz) May 14, 2022
நியூயார்க் போஸ்ட்டின் படி , விமானம் மியாமி டேட் கவுண்டியில் உள்ள பிஸ்கெய்ன் விரிகுடாவின் வடக்கு முனையில் உள்ள ஹாலோவர் இன்லெட் பாலத்தில் தரையிறங்கியபோது எஸ்யூவி மீது மோதியது.
விபத்துக்கு உள்ளான அந்த தனியார் விமானம் மூன்று பயணிகளை ஏற்றிச் சென்றபோது, மின்சாரத்தை இழந்து விழத் தொடங்கியது. அது இறுதியில் நெடுஞ்சாலைப் பாலத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது.
விபத்தில் சிக்கிய எஸ்யூவியை ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் ஓட்டிச் சென்றார். அவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் பிழைத்தனர்.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) சம்பந்தப்பட்ட விமானம் ஒற்றை எஞ்சின் செஸ்னா என்பதை உறுதிப்படுத்தியது. விமானம் ஃபோர்ட் லாடர்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கீ வெஸ்ட் சர்வதேச விமான நிலையத்தின் திட்டமிட்ட இலக்குடன் புறப்பட்டதாக FAA தெரிவித்தது.
மேலும், தகவலின்படி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, உள்ளே ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. காயமடைந்த ஐந்து பேரில், இருவர் அதிர்ச்சிகரமான காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையின் ரைடர் அதிர்ச்சி மையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார், மற்றொருவர் ஜாக்சன் வடக்கு மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் முன்னெச்சரிக்கைக்காக, எஸ்யூவியில் இருந்த தாய் மற்றும் குழந்தைகளும் மவுண்ட் சினாய் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.