புதுடெல்லி: மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட பல பிரிவினர்களுக்கும், ஒன்றிய அரசு ரயில் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. கொரோனா பரவலுக்கு பின், ரயில்வே நிர்வாகம் வருவாய் இழப்பை சந்தித்ததால், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை நிர்வாகம் ரத்து செய்தது. தற்போது, மாற்றுத் திறனாளிகள், நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த தகவல் ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனுதாக்கல் செய்திருந்தார். இதற்கு ரயில்வே அளித்த பதிலில், ‘2020 மார்ச் 20ம் தேதி முதல் 2022 மார்ச் 31 வரை 7 கோடியே 31 லட்சம் மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கட்டண சலுகை அளிக்கப்படவில்லை. இதில், 4.46 கோடி ஆண்கள், 2.84 கோடி பெண்கள், 8,310 திருநங்கைகள் அடங்கும். மூத்த குடிமக்களிடம் இருந்து வருவாய் ஈட்டப்பட்ட மொத்த தொகை ரூ.3,464 கோடி. சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் கூடுதலாக ரூ.1500 கோடி கிடைத்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. ரயில்வே டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு அக்கறை காட்டாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதுகுறித்து ரயில்வே துறை அஷ்விணி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் ‘‘மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை’’ என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.