புதுச்சேரி : மூலக்குளத்தில் நடந்த மறியலால், புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உழவர்கரையில் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு திருவிழா, கடந்த 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.இதனையொட்டி ஆலயம் அருகே வைத்துள்ள பேனர், இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என, ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் பேனர் வைத்தவர்களை கைது செய்ய போலீசார் சென்றனர். இதனை கண்டித்து அப்பகுதி கிறிஸ்துவர்கள் மூலக்குளம் – வில்லியனுார் சாலையில் தனியார் மகால் அருகே நேற்று மதியம் 2.40 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் விழுப்புரம் சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. ரெட்டியார்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.கிறிஸ்துவர்கள் கூறுகையில், ‘ஆலய திருவிழாவிற்காக வைக்கப்பட்டுள்ள பேனர், இந்து மதத்தினரை புண்படுத்தவில்லை. பால்குடம் எடுத்து வந்தவர்களுக்கு அன்னை வேளாங்கண்ணி அருள்பாலித்த நிகழ்வை தான் பேனராக வைத்துள்ளோம்’ என தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து, மாலை 5.௦௦ மணியளவில் போராட்டத்தை கைவிட்டனர். மறியலால், விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் வழுதாவூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
Advertisement