வடகொரியாவில் காய்ச்சல் காரணமாக 21 பேர் உயிர்இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வட கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அந்நாட்டுக்கு பெரும் பேரழிவாகும் என்று அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகளில் கொரோனா யாரையும் தாக்கவில்லை.
இந்நிலையில் வடகொரியாவில் கொரோனா தொற்றுத் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்தக் கொரோனா தொற்றுத் தொடர்பில் வடகொரியாவில் இருந்து எந்த வித தகவல்களும் வெளிவராத நிலையில் தற்போது அங்கு கொரோனா தொற்று உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 3 நாட்களில் வைரஸ் தொற்றுக் காரணமாக 42 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதேபோன்று 8 இலட்சத்திற்கு மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொற்று வேகமாகப் பரவுவதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அந்நாட்டுத் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.