தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துவாகப் பிறந்து 18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தேவசகாயம் பிள்ளை, புனிதராக அறிவிக்கப்பட்ட முதல் சாமானிய இந்தியர் ஆனார்.
85 வயதான போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் நடைபெற்ற புனிதர் பட்டமளிப்பு விழாவில் தேவசகாயம் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் நடந்த முதல் புனிதர் பட்டமளிப்பு விழா இதுவாகும். தேவசகாயத்துடன் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேர் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தேவசகாயம் வாழ்க்கை!
தேவசகாயம் ஏப்ரல் 23, 1712 அன்று, பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் கிராமத்தில் ஒரு இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெயர் நீலகண்ட பிள்ளை.
பின்னர் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மாவின் அவையில் கருவூல அதிகாரியாக பணியாற்றினார். அப்போது டச்சு கடற்படைத் தளபதி டிலனாய் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் கிறிஸ்தவ மதம் குறித்து அறிந்துகொண்டார்.
கிறிஸ்தவ மதம் மீதான ஈர்ப்பின் காரணமாக 1745-ம் ஆண்டில் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக மாறினார். தனது பெயரை ‘லாசரஸ்’ என மாற்றிக்கொண்டார். லாசரஸ் என்பதற்கு ‘கடவுள் என்னுடைய உதவி’ என்று பொருள். அதன்பேரில் தேவசகாயம் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.
ஆனால் அவரது மதமாற்றம் அவரது சொந்த மதத்தின் தலைவர்களின் கோபத்தை தூண்டியது .
இதனால் அவர் மீது தேசத்துரோகம் மற்றும் உளவு பார்த்ததாக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் அரச நிர்வாகத்தில் இருந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.
“பிரசங்கம் செய்யும் போது, அவர் குறிப்பாக சாதி வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை வலியுறுத்தினார்”, இது “உயர் வகுப்பினரின் வெறுப்பைத் தூண்டியது, மேலும் அவர் 1749 இல் கைது செய்யப்பட்டார். 1749 முதல் 1752 வரை தேவசகாயம் பிள்ளை பலவிதமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.
ஜனவரி 14, 1752 அன்று ஆரல்வாய்மொழி காட்டில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
புனிதர்
கிறிஸ்தவ மத நம்பிக்கைக்காக தனது உயிரைத் தியாகம் செய்ததால், 2004 ஆம் ஆண்டில், கோட்டார் மறைமாவட்டமும், தமிழ்நாடு பிஷப்ஸ் கவுன்சில் மற்றும் இந்திய கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டும் இணைந்து தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்க பரிந்துரைத்தது. அவர் பிறந்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு 2012 இல் கோட்டார் மறைமாவட்டத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.
2020-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி போப் ஆண்டவரால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இந்நிலையில், அவருக்கு வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டத்தை வழங்கினார்.
இந்தியாவில் இல்லற வாழ்வில் இருந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதன்முறை. மேலும் தமிழ்நாட்டின் முதல் புனிதர் என்ற பெருமையையும் தேவசகாயம் பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“