ரோம் :
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக போப்பாண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதன்படி நேற்று, தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் வழங்கும் நிகழ்ச்சி, வாடிகன் நகரிலுள்ள ரோமில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையில் கோலாகலமாக நடைபெற்றது. காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில்) போப் ஆண்டவர் பிரான்சிஸ் கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.
இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இக்காட்சிகளை அங்கு சென்றுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைபடுத்தினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் தமிழகத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். ஜூன் 5ம் தேதி மறைசாட்சி தேவசகாயம் கொல்லப்பட்ட இடமான ஆரல்வாய்மொழியின் காற்றாடி மலையில் பெருவிழா நடைபெற உள்ளது.