வேலூர்: வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். பரோல் கோரி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன், வழக்கு விசாரணைக்காக ஆஜராகி சாட்சியத்திடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் என்ற ஸ்ரீகரன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள இவரது மனைவி நளினி தற்போது பரோலில் விடுவிக்கப்பட்டு காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். தனது மனைவியும் பரோலில் இருப்பதால் குடும்பத்தினரை சந்திக்க ஏதுவாக 6 நாள் பரோல் வழங்கக் கோரி வேலூர் சிறை நிர்வாகத்திடம் முருகன் மனு அளித்திருந்தார்.
ஆனால், முருகனின் அறையில் இருந்து சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு மற்றும் பெண் சிறை அலுவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்டது, வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் பேசிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பரோல் வழங்க முடியாது என்று சிறை நிர்வாகம் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விரைந்து முடிக்க தனது தரப்பில் தயாராக இருந்தும் சிறை நிர்வாகம் கால தாமதம் செய்வதாகக் கூறி முருகன் கடந்த 2-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதன் காரணமாக அவரது உடல் நிலை மோசமாகி வருகிறது.
முருகனின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களின் அறிவுரையின் பேரில் இருதினங்களுக்கு முன்பு மிகவும் மோசமாக இருந்த முருகனுக்கு 3 பாட்டில்கள் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.
நீதிமன்றத்தில் முருகன்: வேலூர் ஜே.எம் 3-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பத்மகுமாரி முன்னிலையில் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதற்காக முருகனை காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
வழக்கின் சாட்சியாக சிறைக்காவலர் தங்கமாயன் ஆஜராகினார். இந்த வழக்கில் வழக்கறிஞருக்கு பதிலாக முருகனே வாதித்து வருவதால் காவலர் தங்கமாயனிடம் சுமார் 30 நிமிடங்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து வழக்கை நாளை தொடருவதாகவும் வழக்கின் மற்றொரு சாட்சியான தலைமை வார்டர் இமானுவேல், வழக்கின் விசாரணை அதிகாரியான பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் நாளை (17-ஆம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்றும் முருகனையும் காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் பத்மகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து, காவல் துறையினர் பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.