வாழ்நாளில்‌ மறக்க முடியாத இடம்‌ வேதா நிலையம்: ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

சென்னை

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, போயஸ் கார்டனில் வசித்து வந்த வேதா நிலையத்தின் பொன்விழாவையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“போயஸ்‌ கார்டனில்‌ உள்ள வேதா நிலையத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தொண்டர்கள்‌ எல்லாம்‌ கோயிலாக பூஜித்த வேதா நிலையத்திற்கு இன்று பொன்‌ விழா என்பதையறிந்து என்‌ மனம்‌ பூரிப்படைகிறது.

தமிழ்நாட்டில்‌ அரசியல்‌ திருப்பம்‌ ஏற்படுவதற்கு பல முறை காரணமாக இருந்த இடம்‌  அம்மா அவர்கள்‌ வாழ்ந்த வேதா நிலையம்‌. இப்படிப்பட்ட இன்றியமையாத்‌ தன்மை வாய்ந்த வேதா நிலையத்திற்கு பல முறை செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததை என்‌ வாழ்நாளில்‌ கிடைத்த வரப்‌ பிரசாதமாக நான்‌கருதுகிறேன்‌. “மக்களால்‌ நான்‌ மக்களுக்காக நான்‌” “உங்களால்‌ நான்‌ உங்களுக்காக நான்‌” “எல்லாரும்‌ எல்லாமும்‌ பெற வேண்டும்‌” “அமைதி வளம்‌ வளர்ச்சி” போன்ற முழக்கங்கள்‌ உருவான இடமாக, “விலையில்லா அரிசி வழங்கும்‌ திட்டம்‌”, “விலையில்லா மடிக்கணினி வழங்கும்‌ திட்டம்‌”, “கட்டணமில்லா கல்வி வழங்கும்‌ திட்டம்‌”, “விலையில்லா மிதிவண்டி வழங்கும்‌ திட்டம்‌”, “மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌”, “உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌”, “விலையில்லா செம்மறி ஆடுகள்‌ மற்றும்‌ கறவை மாடுகள்‌ வழங்கும்‌ திட்டம்‌”, “மானிய-விலையில்‌ மகளிருக்கு இரு சக்கர வாகனம்‌ வழங்கும்‌ திட்டம்‌” “அம்மா உணவகங்கள்‌” “ஆலயந்தோறும்‌ அன்னதானம்‌ வழங்கும்‌ திட்டம்‌” என பல ஏழையெளிய மக்கள்‌ பயன்பெறும்‌

தமிழ்நாடு முன்னேற்றப்‌ பாதையில்‌ செல்வதற்கான அடித்தளமாக வேதா நிலையம்‌ விளங்கியது என்று சொன்னால்‌ அது மிகையாகாது. இப்படி மக்கள்‌ நலன்‌ ஒன்றையே குறிக்கோளாகக்‌ கொண்டு செயல்பட்ட வேதா நிலையம்‌ என்னும்‌ கோயிலுக்குச்‌ சென்று அங்குள்ள தெய்வமான அம்மா அவர்களை காணும்‌ வாய்ப்பை பல முறை பெற்றிருப்பதை எனக்கு கிடைத்த பெரும்‌ பாக்கியமாக நான்‌ கருதுகிறேன்‌.

சராசரிகள்தான்‌ சக்கரவர்த்தி ஆகிறார்கள்‌, சாதாரணமானவர்களில்‌ இருந்துதான்‌ அசாதாரணர்கள்‌ தோன்றுகிறார்கள்‌ என்றெல்லாம்‌ கூறுவது உண்டு. சராசரிகளை சக்கரவர்த்திகளாக்கிய இடம்‌ இந்த வேதா நிலையம்‌ என்று சொன்னால்‌ அது மிகையாகாது. சாமான்யனும்‌ அமைச்சராகலாம்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ ஆகலாம்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ ஆகலாம்‌ என்பதை தன்‌ செயல்கள்‌ மூலம்‌ இந்த உலகிற்கு, இந்திய நாட்டிற்கு எடுத்துக்‌ காட்டியவர்‌ அம்மா அவர்கள்‌. இன்னும்‌ சொல்லப்போனால்‌ நானே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று நான்‌ தமிழக மக்களால்‌ நன்கு பேசப்படுகிறேன்‌, இந்திய மக்களால்‌ நன்கு அறியப்படுகிறேன்‌ என்றால்‌ அதற்கு மூலக்‌ காரணம்‌ அவர் தான்.

என்‌ வாழ்நாளில்‌ மறக்க முடியாத இடம்‌ வேதா நிலையம்‌. என்னை இந்த நாட்டிற்கு அடையாளம்‌ காட்டிய புரட்சித்‌ தலைவி வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்திற்கு நான்‌ பலமுறை சென்று வந்ததையும்‌, அங்கேயிருந்து மாண்புமிகு அம்மா அவர்களிடமிருந்து அறிவுரைகளையும்‌, ஆலோசனைகளையும்‌ பெற்று வந்ததையும்‌, என்மீது மாண்புமிகு அம்மா அவர்கள்‌ காட்டிய அன்பையும்‌, பாசத்தையும்‌, நேசத்தையும்‌, நான்‌ மாண்புமிகு அம்மா அவர்கள்மீது வைத்திருந்த பக்தியையும்‌, விசுவாசத்தையும்‌, நம்பிக்கையயும்‌ வேதா நிலையத்தின்‌ பொன்‌ விழா நாளான இன்று நினைத்துப்‌ பார்க்கிறேன்‌. என்‌ கண்கள்‌ கலங்குகின்றன. வார்த்தைகள்‌ வரவில்லை.

நான்‌ நித்தம்‌ நினைக்கும்‌ திருக்கோயிலான வேதா நிலையத்தின்‌ பொன்‌ விழா நாளான இன்று அத்திருக்கோயிலின்‌ தெய்வமான மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களுக்கு என்னுடைய கோடானு கோடி நன்றிகளையும்‌, வணக்கத்தினையும்‌, மரியாதையினையும்‌ பாதம்‌ தொட்டு பணிவுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌”

இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம்…
அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு- 222 கிராமங்கள் நீரில் மூழ்கின

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.