விஜய்யின் 'குஷி' தலைப்பை மீண்டும் வைப்பது சரியா?
தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஷிவநிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா, சமந்தா நடிக்கும் புதிய படத்திற்கு 'குஷி' என்ற தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
எஸ்ஜே சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா நடித்து 2000ம் வருடத்தில் வெளிவந்த படம் 'குஷி'. அப்படத்தை யாராலும் மறக்க முடியாது. விஜய்யின் வெற்றிப் படங்களில் மிகவும் முக்கியமான படம். இப்போதும் இந்தப் படத்தை டிவியில் ஒளிபரப்பினால் பலரும் தவறாமல் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு அந்தப் படம் சினிமா ரசிகர்களிடம் ஒன்றிப் போயுள்ளது.
அப்படிப்பட்ட ஒரு படத்தின் டைட்டிலை இப்போது மீண்டும் வைத்திருப்பது தலைப்புப் பஞ்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இப்படம் அதே தலைப்பில் தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகா நடிக்கவும், ஹிந்தியில் பர்தீன் கான், கரீனா கபூர் நடிக்கவும் ரீமேக் ஆனது. மூன்று மொழிகளில் வந்த ஒரு படத்தின் தலைப்பை இப்படி மீண்டும் வைப்பது சரியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
'குஷி' படத்தை தமிழில் முதன் முதலாகத் தயாரித்த ஏஎம் ரத்தினத்தின் சூர்யா மூவீஸ் அல்லது அப்படத்தை இயக்கிய எஸ்ஜே சூர்யா ஆகியோர் இத்தலைப்பை மீண்டும் வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருந்தால் கூட அதை விஜய் ரசிகர்களும், பவன் கல்யாண் ரசிகர்களும் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.