கடந்த மாதம் கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.
அந்த மரணம் இறப்பின் துயரத்தை மட்டும் வெளிக்கொணராமல், பிள்ளைகளை கனடாவுக்கு கல்வி கற்பதற்காக அனுப்பும் பெற்றோர் அனுபவிக்கும் கஷ்டங்கள் குறித்த உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துள்ளது.
கனடாவில் கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து சென்ற கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் சென்ற மாதம் ரொரன்றோவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மகனை இழந்த துயரம் ஒருபுறம் இருக்க, தானும் தன் மனைவியும் தங்கள் மொத்த சேமிப்பையும் மகனுடைய கல்விக்காக செலவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார் கார்த்திக்குன் தந்தையான ஜித்தேஷ் வாசுதேவ்.
அத்துடன், தங்கள் வீட்டையும் அடமானம் வைத்து 50,000 டொலர்கள் கடன் வாங்கித்தான் தங்கள் மகன் கார்த்திக்கை கனடாவுக்கு தாங்கள் அனுப்பியதாக தெரிவிக்கும் ஜித்தேஷ், அந்த பணம் கார்த்திக்கினுடைய முதலாம் ஆண்டு கல்விக்கட்டணத்துக்கு மட்டுமே போதுமானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள விடயம் கவனிக்கவேண்டிய விடயமாக அமைந்துள்ளது.
ஆம், கார்த்திக்கை அவரது பெற்றோர் இழந்துவிட்டார்கள். அது ஈடு செய்யமுடியாத இழப்பு. ஆனால், மகன் வெளிநாடு செல்வான், கல்வி கற்பான், வேலைக்குச் செல்வான், கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், இருந்த சேமிப்பு எல்லாவற்றையும் செலவிட்டு, வீட்டையும் அடமானம் வைத்து அவரது பெற்றோர் வாங்கிய கடனை இனி யார் அடைப்பார்கள்.
கார்த்திக்குடைய பெற்றோரின் இரட்டிப்புக் கவலையை யார் தீர்க்க முடியும்?
ஏற்கனவே, கனடாவுக்குப் புலம்பெயர்ந்தோர் பலர், விலைவாசியை சமாளிக்க முடியாமல் நாடு திரும்பிக்கொண்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் உள்நாட்டு மாணவர்களை விட நான்கு மடங்கு அதிகக் கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது என அடுத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ஒன்ராறியோ ஆடிட்டர் ஜெனரலுடைய அறிக்கை ஒன்று, ஒன்ராறியோ கல்லூரிகள், சர்வதேச மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்தை சார்ந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், அரசுக் கல்லூரிகளில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் 30 சதவிகிதம் மட்டுமே என்றும், ஆனாலும், கல்லூரிக்கு வந்த ஆண்டு கல்விக்கட்டணத்தில் 68 சதவிகிதத்தை அவர்கள் மட்டுமே கட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை, 1.7 பில்லியன் டொலர்கள்!
2020ஆம் ஆண்டின் Global Affairs Canada அறிக்கையின்படி, கனடாவின் 2017, 2018ஆம் ஆண்டுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என அழைக்கப்படும் GDPயில் சர்வதேச மாணவர்களின் பங்களிப்பு 16.2 மற்றும் 19.7 பில்லியன் டொலர்கள் ஆகும்!
ஆக, ஒரு நல்ல எதிர்காலம் அமையும் என நம்பி கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களில் ஒருவரான கார்த்திக்கின் குடும்பம் அவரது மரணத்தால் கதிகலங்கிப் போயிருக்கும் நிலையில், இந்த செய்தி மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், தங்கள் மகனுடைய மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என அவரது பெற்றோர் பிராச்சாரங்களைத் துவக்கியுள்ளார்கள்.