ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிராந்திய அளவில் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, 2021 அக்டோபரில் இந்தியா ஏற்றது. இதைத் தொடர்ந்து டில்லியில் நேற்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடந்தது.
இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்பு வல்லுனர்கள் மூவர் உட்பட, உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஆப்கன் விவகாரம் குறித்து உறுப்பு நாடுகள் தீவிரமாக விவாதித்தன. சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் மாறக் கூடாது என வல்லுனர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து ஆப்கன் துாதர் பரித் மமுன்ட்சாய் கூறுகையில், ”ஆப்கன் பாதுகாப்பு தொடர்பான அனைத்து பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.”மிக முக்கியமான இந்த மாநாட்டை இந்தியா நடத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, பாக்., ரஷ்யா, தஜிகிஸ்தான், கிரியோஜிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன; ஆப்கன் பார்வையாளராக உள்ளது.