மதுரை: நாளை மறுநாள் மீண்டும் நடக்க உள்ள மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராபட்சமில்லாமல் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சனைகளை பற்றி பேச இருப்பதால் விவாததிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டம், விவாதமே இல்லாமல் அவசரம் அவசரமாக முடிந்த நிலையில் வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதிக்க மீண்டும் நாளை மறுநாள் (18ம் தேதி) கூட்டம் நடக்கிறது. அதனால், அன்று அவை காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவியேற்றப் பிறகு நடந்த முதல் மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுடைய மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது பதவியேற்பு விழாபோல் போலவே நடந்து முடிந்தது. இரண்டாவது கூட்டம் கடந்த வாரம் நடந்தது. அப்போது, அதிமுக கவுன்சிலர்களுக்கு முறையாக இருக்கை வழங்காததால் அவர்கள் திமுக கவுன்சிலர்கள் இருக்கையை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டது, செய்தியாளர்களை மேயர் கணவர் ஆதரவாளர்கள் தாக்கியது போன்றவற்றால் களபேரத்துடன் கூட்டம் முடிந்தது.
அதனால், மேயர் இந்திராணி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடனே கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட, பட்ஜெட் பற்றியும், தங்கள் வார்டுகள் பற்றியும் எந்த விவாதமும் செய்ய வாய்ப்பு இல்லாததால் கவுன்சிலர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் தான் நாளை மறுநாள் 18ம் தேதி மீண்டும் மாநகராட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றியும், கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள் பற்றியும் மேயரிடமும், அதிகாரிகளிடம் விவாதிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வார்டுகள் பிரச்சனைகள் பற்றியும் பட்ஜெட் குறித்தும் கேட்கும் கேள்விகளும், அதற்கு மேயர், மாநகராட்சி ஆணையாளர்கள் அளிக்க போகும் பதில்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடந்த மாநகராடசி கூட்டம், மேயர் இந்திராணி வந்தார் சென்றார் என்ற அடிப்படையில் நடந்து முடிந்தது. மேலும் எழுதி கொடுத்ததை மட்டும் மேயர் இந்திராணி வாசித்து சென்றார்.
தற்போது எதிர்க்கட்சி கவுன்சிலர்களை விட சொந்த கட்சியான திமுக கவுன்சிலர்கள் எழுப்ப போகும் விவாதமே மேயர் தரப்பினரை கலக்கமடைய வைத்துள்ளது. ஏற்கனவே மேயர் தேர்வில் தொடங்கி தற்போது வரை மேயருக்கும், திமுக கவுன்சிலர்களும் திரைமறைவு அரசியல் பனிப்போர் நடக்கிறது. அதனால், அவர்களுமே வார்டு பிரச்சனைகள் போர்வையில் மேயருக்கு இந்த கூட்டத்தில் நெருக்கடி கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
அவர்களை சமாளித்து, கேள்விகளை சாதுரியமாக உள்வாங்கி அதற்கு சரியான பதிலை வழங்க வேண்டும். அதில் திருப்தியடையாத கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால், மாநகராட்சி கூட்டத்தை மேயர் எந்தளவுக்கு கையாளப்போகிறார் என்பது நாளை தெரியும். மேலும், மாமன்ற கூட்டங்களில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மட்டுமில்லாது ஆளும் கட்சி கவுன்சிலர்களே சில சமயம் சீறுவார்கள். அவர்களும் வார்டுகளில் தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சனைகளை பற்றியும், அதற்கு மாநகராட்சி எடுக்கப்போகும் நடவடிக்கைளை பற்றியும் கேள்வி எழுப்புவார்கள். அதனால், நாளை மறுநாள் நடக்கும் மாநகராட்சி கூட்டம், விவாததிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.