சென்னை:
சென்னை துறைமுகம் மதுரவாயல் இடையே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2010ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.1,815 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டினார்.
இதன்பின்னர் பல்வேறு காரணங்களால் பணிகள் நடைபெறவில்லை. தற்போது இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.5,800 கோடி செலவில் இரண்டடுக்கு மேம்பால சாலையாக அமைய இருக்கிறது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26ந் தேதி சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மதுரவாயல்-துறைமுகம் இரண்டடுக்கு மேம்பால பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் பெங்களூரு-சென்னை 4 வழி விரைவுச் சாலையின் 3வது கட்டப்பணி, மப்பேடு பகுதியில் பன்முக சரக்கு போக்குவரத்து பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், புதிய திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதற்கிடையே மதுரவாயல் துறைமுகம் இரண்டடுக்கு மேம்பாலச் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகம், கடற்படை ஆகியவை இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.