சனா : ஏமன் நாட்டில் ஆறு ஆண்டுகளுக்குப் பின், நேற்று முதன் முறையாக தலைநகர் சனாவில் இருந்து பயணியர் விமான சேவை மேற்கொள்ளப்பட்டது. மேற்காசிய நாடான ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பிற்கும், அரசு படைகளுக்கும் இடையே 2014ல் உள்நாட்டு போர் வெடித்தது.
ஏமன் அதிபர் சவுதியில் தஞ்சம் அடைய, தலைநகர் சனாவை ஹவுதிகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா ஆதரவுடன் ஏமன் ராணுவத்தினர் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே உள்நாட்டு போர் நீடித்து வந்தது.
இந்நிலையில், ஐ.நா., மேற்கொண்ட சமரச பேச்சில் ஏமன் அரசுக்கும், ஹவுதிகளுக்கும் இடையே, ஏப்., 2 முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், வாரம் இரு முறை சனாவில் இருந்து ஜோர்டான், எகிப்து நாடுகளுக்கு விமான சேவையை மீண்டும் துவக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, 151 பயணியருடன் ஏமன் விமானம் சனாவில் இருந்து ஜோர்டானுக்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்திற்கு சர்வதேச வழக்கப்படி தண்ணீரை பீய்ச்சி அடித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக சனாவில் இருந்து பயணியர் விமான சேவை மேற்கொள்ளப்பட்டது. அடுத்து, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோடிடா துறைமுகத்தில் இருந்து செங்கடல் வழியே, 18 கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்ல உள்ளன. ஏமனில் மீண்டும் அமைதி திரும்புவதற்கான இத்தகைய நடவடிக்கைகளை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
Advertisement