மாநகரம் படத்தின் வழியாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமானபோது இவர் இன்னும் பல மேஜிக்குகளை திரையில் நிகழ்த்தப் போகிறார் என்பது மட்டும் ரசிகர்களுக்குத் தெரிந்தது. 2017-ல் மாநகரம் படத்திற்கு பிறகு ஒரு நேர்காணலில் பேசும் போது பெரிய நடிகர்கள் அஜித்தோ, விஜய்யோ புதிய இயக்குநர்களை நம்பி நடிக்கும்போதுதான் ஒரு மூமென்ட் நடக்கும் என பேசியிருந்தார். அதனை மாஸ்டரில் சாத்தியமாக்கிவிட்டு அடுத்த இலக்காக அவர் இயக்கியுள்ள படம் ‘விக்ரம்’.
விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. கமலின் படங்களைப் பார்த்து சினிமா கற்றுக்கொண்டதாக லோகேஷ் கனகராஜ் பல மேடைகளில் பேசியிருக்கிறார். நேற்று நடந்த விழா மேடையில் கமலை வைத்து தான் இயக்கிய விக்ரம் படம் குறித்து அவர் பேசினார். “பகத் பாசில் ரொம்ப ரிசர்வர்டாக இருப்பார் என நினைச்சேன். ஆனால் ரொம்ப சீக்கிரமே பழகிட்டார். விஜய் சேதுபதி மாஸ்டரிலும் வில்லனாக நடித்திருந்தார். எவ்வளவு தூரம் புசுசா அவரை காட்ட முடியும்னு யோசிச்சோம். விஜய் சேதுபதிக்கு இன்னொருத்தர் ட்ரைனிங் கொடுத்தாங்க. என்னோட இயக்கத்துல இனி அவர் வில்லனா நடிக்க மாட்டார்ன்னு இரண்டு பேரும் சத்தியம் பண்ணினோம்.”
“கமல் சார் பத்தி எப்போ பேசணும்னு நினைச்சாலும் பேச முடியாது. சார்கிட்டயே சொன்னேன். சென்னை வந்தப்போ இதுதான் கமல் சாரோட வீடுன்னு ஒரு தடவை ஆட்டோ ட்ரைவர் சொன்னாரு. சின்ன வயசுல புக்ல படிச்ச ஞாபகம். யாராவது அவர் வீட்டு பக்கம் போகும்போது சார் மாடியில் நின்னாருனு கை காமிச்சா திரும்பி கைகாட்டுவார்ன்னு படிச்சேன். ஒரு அரை மணிநேரம் சார் வீட்டுக்கு முன்னாடியே நின்னுருப்பேன்.”
“எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. சார் இப்போ வந்து கைகாட்டணும்னு வேண்டிக்கிட்டேன். ஆனால் அவருக்கே என்னை ஆக்ஷன் கேட் சொல்ல வச்சுட்டாரு. இதை கமல் சார் கிட்ட சொன்னப்போது அவர் வழக்கம் போல ‘நானும் இல்லைன்னு சொல்லல. இருந்தா நல்ல இருக்கும்னு தான் சொல்றேன்’ என சொன்னார். சர்-ரியலா இருக்கு. என் ஊர்ல இருந்து இந்த இடத்துக்கு வந்து சாரை டைரக்சன் பண்ற நிலைல இருக்கேன்னா அதுக்கு சார்தான் காரணம், அதுக்கு பின்னாடி 10 வருஷ உழைப்பு இருக்குனு நினைக்கிறேன்.”
“சார் உழைப்பு பத்தி சொல்லணும்னா ஒரு நிகழ்வு ஞாபகம் வருது. கோவிட்டுக்கு பிறகு சார் நடிக்க இருந்த கிளைமாக்ஸ் சீனை மிட்-நைட்ல 2 மணிக்கு சூட் பண்ணோம். அப்போ சார் சூட்டுக்கு முன்னாடி ட்ரைசெப்ஸ் மெயின்டைன் பண்ணுவதற்காக 26 புஷ் அப்ஸ் எடுத்துட்டு ஸ்பாட்டுக்கு வந்தார். இதைப் பார்த்த பிறகு நாமெல்லாம் இந்த வயசுல பண்றது உழைப்பே இல்லை எனத் தோன்றியது. படம் பார்த்துட்டு ‘சார் எனக்கு படம் பிடிச்சுதுன்னு’ சொன்னாங்க. எனக்கு அப்போ தான் ரிலீவ் ஆன மாதிரி இருந்தது. சின்சியரா வேலை செய்து இருக்கோம். படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்னு நம்புறேன்” எனப் பேசி முடித்தார். விக்ரம் படத்தில் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது பற்றியும் லோகேஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.