`பீஸ்ட்’ படத்தையடுத்து வம்சி பைடிப்பள்ளியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `விஜய் 66′ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபு, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா மந்தனா, ஷாம், யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா உள்பட பலர் நடிக்கின்றனர். வசனங்களை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். இவற்றை எல்லாம் படக்குழுவினரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
படத்தின் பாடல்களை தமன் கம்போஸ் செய்து கொடுத்துவிட்டதாகவும், அதில் ஒரு பாடலை சென்னையில் நடந்த முதல் ஷெட்யூல் படப்பிடிப்பில் படமாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கிறார். விஜய்யுடன் ‘வில்லு’, ‘போக்கிரி’ படங்களுக்கு பிறகு பிரபுதேவா இதில் இணைந்திருக்கிறார். பொதுவாக எந்தப் பாடலாக இருந்தாலும் அதிக பட்சம் மூன்று நாள்களுக்குள் கொரியோகிராப் செய்துவிடுவது நடனப்புயலின் வழக்கம். எனவே, இதிலும் அதே திட்டமிடல்தான் என்கிறார்கள்.
வருகிற ஜூன் 22ம் தேதியன்று விஜய்யின் பிறந்தநாள் வருவதால், அன்று படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகலாம் என்கிறது விஜய் வட்டாரம். அதைப் போல ‘விஜய் 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ‘மாஸ்டர்’ படம் கடந்த 2019-ல் அக்டோபர் 3-ல் பூஜையுடன் துவங்கியது. படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த சென்ட்டிமென்ட்டில் ‘விஜய் 67’ படத்தின் பூஜையையும் அக்டோபர் 3-ல் துவங்கத் திட்டமிட்டு வருகின்றனர்.