வட கொரியாவில் ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவிய போதும், வட கொரியாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நுழையாமல் இருந்தது. அங்கு எல்லைகள் மூடப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இருந்தாலும், அங்கு கொரொனா இல்லை என்பதை உலக நாடுகளால் நம்ப முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி, தங்கள் நாட்டில் கொரோனா நுழைந்து விட்டதாக வட கொரியா வெளிப்படையாக அறிவித்தது. ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, அங்கு இதுவரை 12 லட்சம் பேர் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் உயிரிழப்புகளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்ற விவரத்தை வட கொரியா இதுவரை அறிவிக்கவில்லை.
வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் – ஐ.நா., சொன்ன ஷாக் நியூஸ்!
இந்நிலையில், தனது கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். அப்போது அவர் அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
கூட்டத்தில், அதிபர் கிம் பேசியதாவது:
அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மருந்தகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறும், மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும் அரசியல் விவகாரக் குழு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் அந்த உத்தரவை சுகாதார அதிகாரிகள் பின்பற்றவில்லை. அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர். கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட ஈடுபடவில்லை. ஆகவே, எனது ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.