திண்டுக்கல் எம்.வி.எம் நகர் ராமசாமி காலனி 7-வது தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஆரோக்கிய அருள்சாமி. இவர் சொந்த வேலை காரணமாக தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார். வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 10 சவரன் நகையை கொள்ளையடித்தனர்.
இதையடுத்து, அருகில் உள்ள எம்.வி.எம் நகர் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜகோபால் வீடு உள்ளது. இவர் பெங்களூரில் வசிக்கும் தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். அதே கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடித்தனர்.
இறுதியாக எம்.வி.எம் நகர் 4-வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் வழக்கறிஞர் லீனஸ். இவர் அமெரிக்காவில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்த திருடர்கள் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி செய்துள்ளனர். ஆனால், அமெரிக்காவில் இருந்தபடி லீனஸ் வீட்டில் சிசிடிவி கேமரா மற்றும் சுற்றுப்புறச் சுவர்களில் அலாரம் ஒலிக்க செய்து கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அங்கிருந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
எம்.வி.எம் நகரில் திருடுபோனது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு வீடுகளில் திருடு போனதும் ஒரு வீட்டில் திருட முயற்சி செய்த சம்பவமும் திண்டுக்கல் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கறிஞர் லீனஸ் வீட்டில் திருடர்கள் கொள்ளையடிக்க முயன்று தெறித்து ஓடியது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “திண்டுக்கல் எம்.வி.எம். நகர் 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் லீனஸ். இவரது மனைவி பெக்கி கோமஸ் அரசு சுகாதாரத் துறையில் இணை இயக்குநராக பணி செய்து வருகிறார். இவர்களது மகள் டெலி சியா மேரி. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். வழக்கறிஞர் லீனஸ் தனது மனைவியுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள தனது மகளை பார்க்க சென்றுவிட்டார். பல நாள்களாக பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றனர்.
முன்னதாக திருடர்கள் வீட்டின் நுழைவு வாயில் அருகே நின்றபோது லீனஸ் வீடு முழுவதும் பொருத்தியிருந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா மூலம் அமெரிக்காவில் உள்ள அவரது செல்போனுக்கு சிக்னல் கிடைத்துள்ளது. இதையடுத்து லீனஸ் அமெரிக்காவில் இருந்தபடி தனது செல்போன் மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டின் மின்விளக்குகளை உடனடியாக எரிய செய்து உள்ளார். இதைப் பார்த்த திருடர்கள் கேமராவை நோட்டமிட்டனர். கேமரா இருப்பது தெரிந்தும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நோக்கத்தில் மீண்டும் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதையறிந்த வழக்கறிஞர் லீனஸ் தனது வீட்டில் இருந்த மின்மோட்டாரை அமெரிக்காவில் இருந்தபடியே செல்போன் மூலம் இயக்கி உள்ளார். அதையும் பொருட்படுத்தாமல் கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புக முயன்றனர். இதையடுத்து தனது கைபேசி மூலம் அங்கிருந்த கேமராவில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கரில் கொள்ளையர்களை வழக்கறிஞர் லீனஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.
அவரது எச்சரிக்கையை கண்டதும் திருடர்கள் கொள்ளை சம்பவத்தில் இருந்து பின்வாங்க முயற்சிக்கவில்லை. எப்படியும் கொள்ளையடித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது வழக்கறிஞர் லீனஸ் சாதுர்யமாக செயல்பட்டு திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு அமெரிக்காவில் இருந்தபடியே தொடர்புகொண்டு கொள்ளைச் சம்பவம் நடப்பதை அறிவித்துள்ளார்.
இதையறிந்த கொள்ளையர்கள் காவல்துறையினர் அங்கு வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உடனே காவல்துறையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதையடுத்து அமெரிக்காவில் இருந்தபடியே வழக்கறிஞர் லீனஸ் அங்கு நடந்தவற்றை விளக்கி உள்ளார். இந்த விளக்கத்தை பெற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவரது வீட்டில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை எடுத்துச் செல்ல காவல்துறையினருக்கு வழக்கறிஞர் அனுமதி அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் சி.சி.டி.வி. காட்சி பதிவான மெமரி கார்டை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். நவீன தொழில்நுட்பம் மூலம் திருடர்களை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட விடாமல் வழக்கறிஞர் சாதுர்யமாக விரட்டியடித்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.