அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுகிறது என்றும், இப்போது போல் எப்போதும் அம்பேத்கரின் எண்ணங்களை பிசகாமல் திமுக நிறைவேற்றும் எனவும் புத்தக அறிமுக விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத்தவர் பிரிவு சார்பில், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற ‘தலித் உண்மைகள்’ (The dalit truth – the battles for realising ambedkar’s vision ) எனும் புத்தகத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புத்தகம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பிரதியை எனக்கு முன்னரே கொடுத்தனர். புத்தக தலைப்பே அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான அரசியலமைப்பு சட்டம் எந்தளவு செயல்பாட்டில் உள்ளது என்பதை அலசி ஆராய்ந்துள்ளார் ராஜூ. முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை 13 பேரின் கட்டுரையும் கருத்து பெட்டகமாக அமைந்துள்ளது. திமுக தமிழ்நாட்டில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான சமூக நீதியை முறையாக நிறைவேற்ற எதிர்கட்சியாக இருந்தபோதும் போராடி பல தியாகம் செய்துள்ளோம்.
பட்டியலின, பழங்குடியினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 16-லிருந்து 18 ஆக இட ஒதுக்கீட்டை 1971-ல் கருணாநிதி உயர்த்தினார். 1989-ல் பழங்குடியினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியது. 2009-ல் அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியது திமுகதான். நாட்டில் அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலை முதலில் அமைத்தது திமுகதான். சமத்துவபுரம் தாட்கோ, புதிரை வண்ணார் , தூய்மை பணியாளர் நல வாரியங்கள் அமைத்தது திமுக.
‘பெண் சிங்கம்’ படத்தில் கருணாநிதி எழுதிய கதை வசனத்திற்கு கிடைத்த 50 லட்சத்துடன், தனது பணத்தையும் சேர்த்து 61 லட்சர்து 5 ஆயிரத்தை பொறியியில் படித்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கருணாநிதி வழங்கினார். இந்தப் புத்தகத்தில் இயக்குநர் ரஞ்சித் திராவிட இயக்க திரைப்படங்கள் குறித்து சுட்டி காட்டியுள்ளார். திமுக ஆட்சியில் முற்போக்கு படங்கள் எடுத்தால் வெற்றி பெறும் என தயாரிப்பாளர்கள் நம்பும் விதமாக இருந்தது என ரஞ்சித் கூறியுள்ளார். அண்ணா, கருணாநிதி திரைத்துறையை கருவியாக பயன்படுத்தி முற்போக்கு கருத்தை பரப்பினர். அந்த வழியில் நானும் பயணிக்கிறேன்.
கருணாநிதியின் ‘ஒரே ரத்தம்’ படத்தில் நந்தக்குமாராக நானும் நடித்தேன். கதாபாத்திரத்தின் பெயரே நான் யார் என்பதை எடுத்து சொல்லும். அருண்ராஜா காமாராஜ் இயக்கிய உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை நேற்று முன்தினம் பார்த்தேன். பட்டியலின மக்களுக்கான உரிமையை பேசும் சிறப்பான படமாக இருக்கிறது. மதவாத ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தற்போது பகுத்தறிவு படங்களை அதிகம் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நடப்பது எனது அரசு அல்ல, நமக்கான அரசு. அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இறையான்மை, சமதர்மம், மத சார்பின்மை, மக்களாட்சி நான்கும் இணைந்து பயணிக்கும் குடியரசாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கர் கனவு.
நாடு வளர மாநிலம் வளர வேண்டும், மாநிலம் வளர மாவட்டம் வளர வேண்டும், மாவட்டம் வளர வேண்டும் என்றால் கிராமங்கள் சமூக நீதி, சமத்துவ பூங்காவாக மாற வேண்டும், அனால்தான் உலகின் வல்லரசு, நல்லரசாக இந்தியா மாறும். அம்பேத்கரின் எண்ணங்களை பிசகாமால் நிறைவேற்றுகிறது திமுக. எப்போதும் நிறைவேற்றும் திமுக” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், புத்தகத்தின் தொகுப்பாளர் ராஜூ, குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM