பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், இலங்கையைப் போல பாகிஸ்தானும் மாறும் என அந்நாட்டு முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தன்னை கொல்வதற்கு பாகிஸ்தானிலும், வெளிநாட்டிலும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இம்ரான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உள்நாட்டு போரை தூண்டுவதற்கு இம்ரான் கான் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஏற்கனவே குற்றம் சாட்டியதுடன், அவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, ஓட்டுக்கு மரியாதை கொடுக்கும் காலம் முடிந்து விட்டது என்று ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தார்.
மேலும் இம்ரான் கான் குறித்து பேசிய அவர், ‘இம்ரான் கைது செய்யப்பட்டால் தற்போதைய இலங்கையைப் போல பாகிஸ்தான் மாறும், அதற்கு ஆளும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இலங்கையைப் போல பாகிஸ்தான் மாற நான் விரும்பவில்லை’ என தெரிவித்தார்.
அத்துடன், அரசு நிறுவனங்கள் அனைத்து பங்குதாரர்களையும் அழைத்து, தேசிய அரசாங்கத்தை அமைத்து, தொழில்நுட்ப வல்லுனரை பிரதமராக நியமிக்க வேண்டும். செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.