அஸ்ஸாமில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. நிலச்சரிவும் ஆங்காங்கே ஏற்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக அஸ்ஸாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ததையொட்டி, அஸ்ஸாமின் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது. மாநிலத்தின் 24 மாவட்டங்களில் 2,02,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே-16 நிலவரப்படி திமா ஹசாவ், கரீம்கஞ்ச், ஹைலகண்டி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. இந்த மாநிலத்தில் மொத்தம் 811 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.1,277 வீடுகள் முழுமையாகவும், 5,262 பகுதியளவும் சேதமடைந்துள்ளன. மாநிலத்தின் 20 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 1.97 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள கம்பூர் பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால், அந்தப் பகுதியில் உள்ள 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகாவும், நேற்று நாகோன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பூர் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவம், துணை ராணுவப் படைகள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.