சமீபத்தில் இந்தியாவில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் ஒரு குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தெரியவந்துள்ளது.
இந்திய சமூகத்தில் குடிமக்கள் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளையே அதிகம் பெற விரும்புவதாக இதன்மூலம் தெளிவாகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களை ஒப்பிடுகையில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் கூறுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு தேசிய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் மட்டுமே உள்ளது தெரியவந்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய குடும்பங்களில் ஆண் குழந்தை பெற பல குடும்பத்தினர் விரும்பியதன் காரணமாக ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா முன்னேறி இருக்கும் போதிலும் பெரும்பாலான குடும்பங்களில் ஆண் குழந்தைகளை பெறவே பெற்றோர் விரும்புவது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பெற்றோர்கள் பலர் தாங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் பலர் அடுத்தடுத்து பெண் குழந்தைகளைப் பெறுவதால் எப்படியாவது ஆண் குழந்தையைப் பெற்றாகவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் படுகின்றனர்.
ஆண் குழந்தைகள் மீதான எதிர்பார்ப்பு காரணமாகவே இவர்கள் பல குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. இதனால் நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என கூறுகிறது இந்த கருத்துக்கணிப்பு.