ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டெடி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் ஆர்யா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் கேப்டன். மிருதன், டிக் டிக் டிக் படங்களைப்போன்று இந்தத் திரைப் படத்திலும் வித்தியாசமான கதையை கையில் எடுத்திருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது கேப்டன் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர் படக்குழுவினர். குறிப்பாக தென்னிந்திய மொழிகளுக்கான கேப்டன் பட உரிமையை 24 கோடி ரூபாய்கு வியாபாரம் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப்படத்தில், சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார். இதுவரை ஆர்யா நடிப்பில் வெளியான எந்த திரைப்படத்திற்கும் இந்த அளவிற்கான டிஜிட்டல் உரிமை விற்பனையானதில்லை. அந்தவகையில் முதன்முறையாக 24 கோடி ரூபாய் கொடுத்து ஆர்யா திரைப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு பிறகு அமேசான் தளத்தில் வெளியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதையும் படிங்க… ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
இப்படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபிள் நிறுவனமும், திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், ‘கேப்டன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி இருந்தது.
– செந்தில்ராஜா