கேஜிஎஃப் – 2 படத்தில் கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரவீனா, தனது கருத்துகளை தொடர்ந்து துணிச்சலாகப் பதிவிட்டு வருபவர். அந்த வகையில் சமீபத்தில் `இது சுதந்திர நாடு. இங்கு நாம் விரும்பும் யாரை வேண்டுமானாலும் வழிபடலாம்’ என்று அவர் பதிவிட்ட ட்வீட் பேசுபொருளாகியுள்ளது.
தெலங்கானாவின் ‘AIMIM’ கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அக்பருதீன் ஓவைசி என்பவர் ஔரங்கசீப்பின் கல்லறைக்குச் சென்று வழிபாடு செய்திருந்தார். இதுகுறித்து ஆனந்த் ரகுநாதன் என்ற எழுத்தாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் “4.9 மில்லியன் இந்துக்களைக் கொன்ற அசுரனின் கல்லறையில் பிரார்த்தனை செய்வது ஆத்திரமூட்டும், மனநோயாளித்தனம் கொண்ட செயலாகும்” என்று பதிவிட்டிருந்தார். ஆனந்த் ரகுநாதனின் இந்தப் பதிவு குறித்துக் கருத்து தெரிவித்த நடிகை ரவீனா டாண்டன் “நாங்கள் சகிப்புத்தன்மையுள்ள இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம், இருப்போம், இருக்கிறோம். இது சுதந்திர நாடு. அனைவருக்கும் சம உரிமை உள்ளது. இங்கு நாம் விரும்பும் யாரை வேண்டுமானாலும் வழிபடலாம்” என்று ட்வீட் செய்திருந்தார்.
ரவீனாவின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதுகுறித்து பலரும் அவரது பதிவின் கீழ் கமென்ட் செய்துவருகின்றனர். அதில் சமூகவலைதளப் பயனர் ஒருவர், “இது முட்டாள்தனமான ஒன்று. ’விரும்பும் யாரை வேண்டுமானாலும் வழிபடலாம்’ என்றால் ஒசாமா, கசாப், அப்சல் குரு, யாசீன் மாலிக், ஹபீஸ் சயீத், மஸீத் அசார் போன்றோரை மக்கள் வணங்கினால் அது சரியாகுமா. சகிப்புத்தன்மையுள்ள நாட்டில் சம உரிமை என்றால் அதுதானே அர்த்தம். நீங்கள் சொல்வதைவிட சோனம் கபூர் சொல்வது எவ்வளவோ பரவாயில்லை” என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு ரவீனா தனது பாணியில், “ஹாஹா, துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் கீழே கொடுத்துள்ள பெயர்களின் பட்டியலையும் சாத்தானையும்கூட வணங்கும் சிலரை நீங்கள் காணலாம். நான் போட்ட ட்வீட்டை புரிந்தவர்கள் புரிந்துகொண்டார்கள்” என்று பதிலளித்திருந்தார்.