லும்பினி: கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியா – நேபாள நாடுகள் இடையே நேற்று 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நேபாளத்தில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார்.
அதன் பின்னர் லும்பினியில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் பிரதமர் மோடி, நேபாள பிரதமர் தியூபா இருவரும் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் இருவரும் புத்தர் ஞானம் அடைந்த போதி மரம் அமைந்துள்ள இடத்துக்குச் சென்றனர். போதி மரத்துக்கு இருவரும் தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள அசோக தூண் அருகே இருவரும் தீபம் ஏற்றினர். கி.மு. 249-ல் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்ட இந்தத் தூண், லும்பினி நகரானது புத்தர் பிறந்த இடம் என்பதற்கான முதல் கல்வெட்டுச் சான்றாக திகழ்கிறது. அந்த இடத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அதன் பின்னர், லும்பினி நகரில் உள்ள டெல்லி சர்வதேச புத்த கூட்டமைப்புக்கு சொந்தமான இடத்தில், சர்வதேசத் தரத்தில் புத்த கலாச்சார பாரம்பரிய மையம் அமைப்பதற்காக பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் தியூபாவும் இணைந்து அடிக்கல் நாட்டினர். இதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிரார்த்தனையிலும் இருவரும் பங்கேற்றனர்.
சர்வதேச தரத்தில் புத்த கலாச்சார பாரம்பரிய மையம் அமைப்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நமது கலாச்சார உறவுகளை முன்னெடுத்துச் செல்கிறோம். புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இந்திய சர்வதேச மையம் அமைப்பதற்கான விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் தியூபா ஆகியோர் பங்கேற்றனர்” என்றார்.
இந்த மையமானது சர்வதேச தரத்தில் அதிநவீன கட்டிடம், மின்சாரம், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்று வசதி, திடக்கழிவுகளை கையாளுதல், பிரார்த்தனை கூடங்கள், தியான மையங்கள், நூலகம், கண்காட்சிக் கூடம், உணவுக் கூடம், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பிரதமர் மோடி, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு நாடுகளுக்கு இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு கூட்டுறவில் புதிய பகுதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கலாச்சாரம் மற்றும் கல்வித்துறைகளில் ஒத்துழைப்புக்கான 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் தியூபா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
லும்பினி, இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள குஷி நகர் ஆகிய 2 நகரங்களுக்கு இடையே சகோதர நகர உறவுகளை ஏற்படுத்த இரு தரப்பிலும் கொள்கை அளவில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உரிய உள்ளூர் அதிகாரிகள் மூலம் தேவையான நடைமுறைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள ஒப்பந்தம் வகை செய்கிறது.
மேலும் கையெழுத்தான ஒப்பந்தங்களின்படி, லும்பினி புத்த பல்கலைக்கழகம், திரிபுவன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இந்திய கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை சார்பில் தலா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ள காத்மாண்டு பல்கலைக்கழகத்துடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை ஐ.ஐ.டி. மற்றும் நேபாள கல்வி நிறுவனங்கள் இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்நிலையில் லும்பினி நகரில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகள் மாலையில் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து மாலையில் பிரதமர் மோடி நேபாளத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.