தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்தி பேசுபவர்கள் பானிபூரி தான் விற்கிறார்கள் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தி உட்பட மூன்றாம் மொழி கற்க போதுமான அளவு ஆர்வலர்கள் இருந்தால், அதைக் கற்பிக்க அரசு பரீசிலிக்கும் என கூறியுள்ளார். தற்போது, தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையாக தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் பொன்முடி, தந்தி டிவிக்கு பேட்டியளித்திருந்தார். அதில் கூறியதாவது, மாணவர்கள் மூன்று மொழியை கற்பதில் திமுக அரசுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், இரண்டு மொழி மட்டுமே கட்டாயமாக இருக்கும். ஆந்திராவில் மாணவர்கள் தெலுங்கு மொழியும், மலையாளி மாணவர்கள் மலையாள மொழியும் கற்க விரும்பும் பட்சத்தில், அதற்கு போதுமான ஆர்வலர்கள் இருந்தால் நிச்சயம் பள்ளியில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதே நடைமுறை தான் இந்தி அல்லது கன்னடா மொழிகளுக்கும் பொருந்தும். தமிழக கல்வி முறையில் இந்தி கட்டாய மொழியாக இருக்க முடியாது என்பதை மட்டுமே நாங்கள் திட்டவட்டமாக கூறியுள்ளோம் என்றார்.
மேலும் பேசுகையில், மாநில அரசுப் பள்ளிகளில் மூன்றாம் மொழியை விருப்ப மொழியாக கற்கும் முறையை தொடங்கப் போகிறோம். வேறு மொழி கற்க விருப்பம் உள்ளவர்கள் இருந்தால், விதிகளின்படி அதற்கான ஏற்பாடுகளை முதல்வர் செய்வார் என தெரிவித்தார்.
பானிபூரி சர்ச்சைக்கு விளக்கம்
பொன்முடி தனது பேட்டியில், பானிபூரி குறித்த கருத்து யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தி கற்றுக்கொள்பவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். பல தமிழர்களும் வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டிற்கு வரும் ஹிந்தி பேசும் மக்களில் பெரும்பாலானோர் பானி பூரி கடைகளை நடத்துகிறார்கள். அதைத்தான் நான் சொன்னேன்.
நான் யாரையும் தவறான அர்த்தத்தில் சித்தரிக்கு நோக்கில் பேசவில்லை. ஹிந்தி கற்பதற்கும் வேலை வாய்ப்புகளுக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லை என்பது தான் எனது கருத்து என்றார்.