கடலூர் அருகே தனியார் மகளிர் கல்லூரியின் கழிவறையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், சின்னபாபு சமுத்திரம் பகுதியை சேர்ந்த நாகலிங்கம் மகள் தனலட்சுமி (19 வயது). இவர் கடலூர் அருகே உள்ள கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல் படித்து வந்துள்ளார். மேலும் அவர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற மாணவி தனலட்சுமி, நேற்று மாலை மீண்டும் கல்லூரி விடுதிக்கு வந்து உள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கடலூர் புதுநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
மாணவி தனலட்சுமி தனது தம்பியான சக்தி என்பவருக்கும், தனது தாய்-தந்தைக்கும் உருக்கமான எழுதியுள்ள அந்த கடிதத்தில், “நான் தேர்வில் தோல்வியடைந்து விடுவேன் என்ற பயம் இருக்கிறது. அதனால் நான் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன்.
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பா. தம்பி சக்தி உனக்கு சின்ன வயது. நன்றாக நீ படிக்க வேண்டும். அம்மா அப்பாவை பத்திரமாக பார்த்துக்கொள். இந்த உலகத்தை நம்பாதே” என்று மாணவி தனலட்சுமி தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மாணவியின் இந்த தற்கொலை சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.