சென்னை, மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க ‘மே 17’ இயக்கத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஈழப்பெருநிலத்தில் நடத்தப்பட்ட தமிழர்களின் இனப்படுகொலையை நினைவுகூறும் பொருட்டு, சென்னை, மெரீனா கடற்கரையில் ‘மே 17’ இயக்கம் சார்பாக அன்பு சகோதரர் திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு திமுக அரசு அனுமதி அளிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழினப்படுகொலையை நினைவுகூர்ந்து, அநீதிக்கெதிராக அறவழியில் நீதிகேட்கவும், உரிமை முழக்கமிடவுமே ஆண்டுதோறும் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகி சிலையருகில் அக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. அது ஆர்ப்பாட்டமோ, சாலைமறியலோ, போராட்டமோ இல்லை முழுக்க முழுக்க அறவழி நினைவேந்தல் மட்டுமே, அதற்கும் தமிழகத்தை ஆளும் திமுக அரசு அனுமதி மறுத்திருப்பது வெட்கக்கேடானது.
மெரீனா கடற்கரை போராடுவதற்கான இடமில்லையென்று ஆட்சியாளர்கள் அறிவிப்பீர்களானால், இறந்த அரசியல் தலைவர்களின் உடலைப் புதைப்பதற்கு மட்டுமானதா கடற்கரை? எனும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதற்கு மட்டும் நீங்கள் கோபப்படுவது சரியாகாது. தமிழர்களின் கடற்கரையில் தமிழர்கள் கூடி அழுவதற்கும், சூளுரைத்து எழுவதற்கும் கூடத் தடைவிதிக்கப்படுமென்றால், இந்த அரசு யாருக்கானது?
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த இலங்கையை ஆளும் சிங்கள அரசும் தடைவிதிக்கும்; தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் தடைவிதிக்குமென்றால், இரு அரசுகளுக்கும் இடையே என்ன வேறுபாடு? இரண்டுமே சிங்களர்களுக்குத்தான் ஆதரவானதா? எனும் கேள்விக்கு என்ன பதிலுண்டு!
ஆகவே, உலகம் முழுக்கப் பரவி வாழக்கூடிய தமிழர்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்து, சென்னை, மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க ‘மே 17’ இயக்கத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டுமெனவும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இனப்படுகொலை நாளை நினைவுகூர்வதற்கும் எவ்விதத் தடையும் விதிக்கக்கூடாதெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.