மேற்கு வங்க அரசு போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய 2 ஆம் மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மாநில கல்லூரியில் இடம் ஒதுக்கியது. ஆனால், இதற்கு மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது.
இத்தகைய முறையில் கல்வி முடிப்பவர்கள், ஒவ்வொரு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள எழுதும் ஸ்கீரினிங் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையமும் (என்எம்சி), சுகாதார அமைச்சக அதிகாரிகளும் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.
ஏப்ரல் 28 அன்று, உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு காரணமாக மேற்கு வங்கம் திரும்பிய 412 மாணவர்களுக்கும், மாநில கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். மேலும், இந்த மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசு எவ்வித பொறுப்பும் எடுத்துக்கொள்ளவில்லை என சாடினார்.
412 மாணவர்களில், 172 பேர் 2ஆம் மற்றும் 3 ஆம் மாணவர்கள் ஆவர். அவர்கள், மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் செய்முறை வகுப்புக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
மாநில அரசின் இந்த அறிவிப்பு, என்எம்சியின் தற்போதைய வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்எம்சி கூற்றுப்படி, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி ஒருவர் தங்கள் நேரடி வகுப்பு, செய்முறை வகுப்புகள், 12 மாத இன்டர்ன்ஷிப்பை ஆகியவற்றை ஒரே கல்லூரியில் முடித்திட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. NMC என்பது மருத்துவக் கல்விக்கான ஒழுங்குமுறை ஆணையமாகும்.
என்எம்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், உக்ரைன் மாணவர்கள் தொடர்பான எந்தவொரு முடிவும், என்எம்சியிடம் இருந்து மட்டுமே வர வேண்டும். தற்போது வழிகாட்டுதல் தெளிவாக உள்ளது. மேற்கு வங்கம் திரும்பிய உக்ரைன் மாணவர்கள், அரசு கல்லூரியில் செய்முறை வகுப்பில் கலந்துகொண்டால், அவர்கள் FMGE தேர்வு எழுத தகுதியற்றவர்கள் ஆவர். இந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு, மேற்கு வங்க அரசு என்எம்சியிடம் அனுமதி வாங்கவில்லை என்றார்.
மூத்த சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உக்ரைன் மாணவர்கள் தொடர்பாக பொறுப்பற்ற முடிவுகளை எடுக்கவேண்டாம் என மாநில அரசுகளிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். மத்திய அரசு, உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களை மற்ற ஐரோப்பிய நாடுகளில் சமமான படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்கும் வழிகளைக் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
மே 10 அன்று, பட்டாச்சார்யா என்எம்சி வழிகாட்டுதல்களை மீறுவது குறித்த விவரங்களைத் திரும்பப் பெறுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், திங்கள்கிழமை மாலை வரை அவர் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட 172 மாணவர்களை தவிர, நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள், செய்முறை பயிற்சிக்காக அரசு கல்லூரிகளில் அப்சர்வரிங் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.
அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் (FAIMA) தலைவர் டாக்டர் ரோஹன் கிருஷ்ணன் கூறியதாவது, ” இந்தியாவில் அப்சர்வரிங் சீட் என எதுவும் கிடையாது. சில நேரங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்கள், குறிப்பிட்ட பகுதியில் பயிற்சிக்காக பல்வேறு நிபுணர்களின் கீழ் பணிபுரிகின்றனர். அதை தான், அப்சர்விங் சீட் என அழைக்கின்றோம். இந்த நடைமுறையை, எம்பிபிஎஸ் கூட முடிக்காத ஒருவருக்கு பின்பற்ற முடியாது என தெரிவித்தார்.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததை அடுத்து, ஏறக்குறைய 18,000 மருத்துவ மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
என்எம்சி அதிகாரிகள் ஏற்கனவே தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, சுமார் 16 லட்சம் விண்ணப்பதாரர்களுடன், 2021 ஆம் ஆண்டிற்கு சுமார் 90,000 எம்பிபிஎஸ் இடங்களை மட்டுமே கொண்ட இந்தியாவில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நபர்களை இணைத்துக் கொள்வது சாத்தியமில்லை என்றார்.
சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், உக்ரைனில் மாணவர்கள் மட்டுமின்றி, சீனா, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா போன்ற நாடுகளில் கல்வி பயிலும் 65,000 பேர் பயணக் கட்டுப்பாடுகளால் நடைமுறைக் கல்வியைப் பெற முடியவில்லை. அந்த மாணவர்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில், சீனாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில், பிற நாடுகளில் மருத்துவக் கல்வியை முடித்துவிட்டு நடைமுறைப் பயிற்சி பெறாதவர்களுக்கு தற்காலிகப் பதிவு செய்வதற்கான கொள்கையை அடுத்த இரண்டு மாதங்களில் உருவாக்குமாறு என்எம்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.