க. சண்முகவடிவேல்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று, பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு அலுமினியம், எவர்சில்வர். பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் மகளிர் சுய உதவிக் குழு மூலம் நேரடியாக வீடு வீடாக சென்று வாங்கும் புதிய திட்டத்தை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் வீடுகளில் சேரக்கூடிய அனைத்து உபயோகமற்ற பொருட்களையும் பணமாக்கும் ஒரு புதிய திட்டத்தை தி மணி பின் என்ற நிறுவனத்தோடு சேர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகள்தோறும் சென்று சேகரிக்கக் கூடிய ஒவ்வொரு கிலோ பழைய பொருட்களுக்கும் 12 ரூபாய் வீதம் நிர்ணயிக்கப்பட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியில் மகளிர் சுய உதவி குழுக்கள் ஈடுபட உள்ளனர்.
எனவே முதல் கட்டமாக 27-வது வார்டில் உள்ள பட்டாபிராமன் சாலையில் உள்ள வீடுகளுக்கு மக்கும் மஞ்சல் நிற பைகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார் மேயர் அன்பழகன். பொதுமக்களிடம் வீட்டில் சேரக்கூடிய பழைய பொருட்களை இந்த பைகளில் சேகரித்து வைக்க அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் வீடுகளில் சேமிக்கப்படும் இந்த பழைய பொருட்கள் அனைத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரடியாக சென்று அவற்றை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் வழக்கமாக மாநகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு குறைந்து மக்கும் குப்பைகள் மட்டுமே சேகரிக்க கூடிய பணிகள் இனி வரக்கூடிய காலங்களில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் துவக்க விழாவில் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் செல்வபாலாஜி, சுகாதாரத்துறை அலுவலர், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“