லக்னோ: சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் 255 இடங்களை வென்று 41.29 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத், இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய முதல்வர் என்ற பெயரை யோகி ஆதித்யநாத் பெற்றார். இந்நிலையில் நேற்று நேபாளம் சென்ற பிரதமர் மோடி, உத்தரபிரதேச தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பின் நேற்றிரவு லக்னோ வந்தார். அவரை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்று இரவு விருந்து அளித்தார். அப்போது பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 52 அமைச்சர்களுக்கு வகுப்பு எடுத்தார். ஒன்றிய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள், மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், மக்களின் பிரச்னைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மோடி அறிவுறுத்தியதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் இல்லத்தில் இரவு விருந்து கூட்டத்தில், பாஜக கூட்டணிக் கட்சியான நிஷாத் கட்சியின் தலைவரும், கேபினட் அமைச்சருமான சஞ்சய் நிஷாத், ஒன்றிய அமைச்சர் அனுப்ரியா பட்டேலின் கணவரும், மாநில அமைச்சர் ஆஷிஷ் படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.