புதுடில்லி : பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள ஐந்து நீதிபதிகளை, தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற ‘கொலீஜியம்’ மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா,நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கன்வல்கர் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், நேற்று டில்லியில் கூடி ஆலோசனைநடத்தியது. அதில், நான்கு மாநிலங்களைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேரை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபின் சங்கி, உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அம்ஜத் சையது, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்திற்கும், எஸ்.எஸ்.ஷிண்டே ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ராஷ்மின் சாயா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், அந்த மாநில தலைமை நீதிபதி பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
Advertisement