திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தொழில் தொடங்குவோர், தொழில் முனைவோர் தங்களின் தொழில் சார்ந்த ஆலோசனைகளை பெறுவதற்காக அரசால் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகம் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் செயல்பட்டு வருகின்றது.
இங்கு பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோருக்கு கடன் வழங்க இந்த அலுவலகம் மூலம் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதும், தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதும் வழக்கம்.
அதேபோல், மாநில மற்றும் மத்திய அரசின் சிறந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு பரிந்துரை செய்தல், புதிய தொழிற்கூட்டுறவு சங்கங்கள் அமைக்கும் நடவடிக்கைகள், நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கண்டறிந்து புனரமைக்க ஏற்பாடு செய்தல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாராக்கடன் பிரச்சனைகளை கண்டறிந்து வசதியாக்க குழு மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும் பயனாளிகளிடம் கடனுக்கு ஏற்ப லஞ்சம் வாங்குவதாகவும், தொழிலே தொடங்காத தொழில் நிறுவனங்களிடம் கூட்டு சேர்ந்து, தொழில் தொடங்கியதற்கான ஆதாரங்களை வைத்து கடன் பெற்று தருவதற்கு சதவீத அளவில் பங்கு பெற்று வருவது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன.
இதன் அடிப்படையில் நேற்று மாலை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரவீந்திரன், பொறியாளர் கம்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.3 லட்சம் பொதுமேலாளர் ரவீந்திரன் அறையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கான எந்த ஆவணமும் அங்கு இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அந்த பணத்தையும், மேலும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்ததோடு வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து திருச்சி உறையூரில் உள்ள பொதுமேலாளர் ரவீந்திரன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ரூ.6 லட்சம் ரொக்கம், ரூ.40 லட்சம் மதிப்புள்ள வங்கி முதலீடு பரிவர்த்தன ஆவணங்கள், கணக்கில் வராத 50 பவுன் தங்க நகைகள், ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் திருவெறும்பூரில் உள்ள பொறியாளர் கம்பன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மேலாளர் ரவீந்திரன் வீட்டில் வங்கி லாக்கர் சாவிகள் 3 கைப்பற்றப்பட்டுள்ளன.
அதை வங்கியில் சென்று திறந்து பார்த்து ஆய்வு நடத்தி வருகின்றனர். லாக்கரில் உள்ளவைகள் பற்றிய விபரங்கள் இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“