கறுப்பின மாணவர்களின் உடைமைகளில் சிறுநீர் கழித்த வெள்ளையின மாணவன்; இனவெறி கொடூரம்!

கேப் டவுன் ,
தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மாணவர்களின் உடைமைகளில் வெள்ளை இன மாணவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேப் டவுன் அருகே உள்ள ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தின் குடியிருப்பில் உள்ள கறுப்பின மாணவர் அறைக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரு வெள்ளையின மாணவர் நுழைந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவன் கறுப்பின மாணவர்களின் உடைமைகளில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின்  புகழ்பெற்ற உயர்மட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவர், தன்னுடன் பயின்று வரும் சக கறுப்பின மாணவரின் உடைமைகளில் சிறுநீர் கழித்த கீழ்த்தரமான சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அந்த மாணவனின் செயலைவிட அவனுடைய பேச்சு வக்கிரம் நிறைந்ததாக உள்ளது. அவன் கூறியதாவது, “வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்களிடம் இதைத்தான் செய்வார்கள்” என்று கூறியுள்ளான்.
இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மாணவன் திங்கள்கிழமை அன்று பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டான்.
இந்த சம்பவத்தை செல்போன் வீடியோ பதிவு செய்து பொதுமக்களுக்கும்  தெரியப்படுத்தியதால், பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தின் உயர் கல்விக்கான குழு இந்த இனவெறி மற்றும் பாகுபாட்டின் வெளிப்பாடான இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளது. 
மேலும், பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர் பிரதிநிதி கவுன்சில் மற்றும் மாணவர் சமூகம் ஆகியவை “இனமற்ற மற்றும் உள்ளடக்கிய கல்வி நிறுவனத்திற்கு” ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த இனவெறி செயலுக்கு  எதிராக,  பல்கலைக்கழக நிர்வாகம், தென்னாப்பிரிக்க மாணவர் காங்கிரஸ் மற்றும் சமூக ஊடக பயனர்கள் ஆகியோர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்தில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் திங்கள்கிழமை அன்று இந்த இனவெறி செயலுக்கு  எதிராக போராட்டம் நடத்தினர்.
வரலாற்று ரீதியாக, நெடுங்காலமாக இந்த பல்கலைக்கழகம் வெள்ளையின மாணவர்களுக்கானதாக இருந்து வந்துள்ளது.  2021-2022 கல்வியாண்டில், அங்கு பயிலும் மாணவர்களில் 54.4 சதவீதம் பேர் வெள்ளையர்களாகவும், 22.5 சதவீதம் பேர் கறுப்பர்களாகவும் இருப்பதாக அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது. இதன் காரணமாக, இனவெறி பாகுபாடு தவிர்க்க முடியாததாக அங்கு பரவி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.