ஸ்ரீநகர்: காஷ்மீரில் பண்டிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு பாதுகாப்புப் படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு இடத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் பதுங்குமிடம் இருப்பதை கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர் அதை தகர்த்து அழித்தனர். அங்கிருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் உட்பட ஆறு வாகனங்கள், 3 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடிய 25 தோட்டாக்கள், மூன்று கையெறி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், காஷ்மீரின் நதிஹால் பகுதியைச் சேர்ந்த ஆரிப் அஜாஸ் ஷெஹ்ரி என்ற பாகிஸ்தானுக்குச் சென்று தீவிரவாதப் பயிற்சி பெற்ற தீவிரவாதி உட்பட 7 பேரை கைது செய்தனர். ஆரிப் அஜாஸ் ஷெஹ்ரி 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று தீவிரவாதப் பயிற்சி பெற்று இந்தியா வந்து பலருக்கு தீவிரவாதப் பயிற்சி அளித்துள்ளார். அவரும் கூட்டாளிகளும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பண்டிபோரா பகுதியில் தீவிரவாதச் செயல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கைதானவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.