புதுடெல்லி: வாரணாசியின் கியான்வாபி மசூதியினுள் சிவலிங்கம் இருப்பதாகக் கூறுவது சரியல்ல என அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) கூறியுள்ளது. இது நாட்டின் மதநல்லிணக்கத்தை குலைக்கும் செயல் என அதன் பொதுச்செயலாளர் காலீத் சைபுல்லா ரஹ்மானி கூறியுள்ளார்.
இது குறித்து ஏஐஎம்பிஎல்பியின் பொதுச் செயலாளரான காலீத் சைபுல்லா ரஹமானி விடுத்த அறிக்கையில், ”கியான்வாபி என்பது ஒரு மசூதி. இது, தொடர்ந்து மசூதியாகவே இருக்கும். இதை கோயில் எனக் கூற முயல்வது ஒரு சதிச் செயல்தானே வேறு எதுவும் அல்ல. நாட்டில் மதநல்லிணக்கத்தை குலைக்கும் முயற்சியாகவும் இது உள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் அதன் உரிமைக்கும் எதிரானது.
இப்பிரச்சினையில் கடந்த 1937-இல் வாரணாசி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இது தீன் முகம்மது என்பவருக்கும், மாநிலச் செயலாளருக்கும் இடையிலான வழக்காக இருந்தது. இவ்வழக்கில், சாட்சியங்கள் மற்றும் தஸ்தாவேஜ்களின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், தற்போது கியான்வாபி வளாகம் முழுவதும் மசூதிக்கு சொந்தமானது எனவும், அதனுள் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த முழு உரிமை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதிலும், கோயிலுக்கானது மற்றும் மசூதிக்கானதுமான நிலஅளவுகள் எவ்வளவு என்பதையும் நீதிமன்றம் அப்போது முடிவு செய்தது. அதேசமயம், தற்போதுள்ள ஒசுகானா முஸ்லிம்களின் வஃக்பு சொத்தாகவும் நீதிமன்றம் ஏற்றிருந்தது. முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம்மராவ் காலத்தில் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 அமலாக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஆகஸ்ட் 15, 1947இல் இருந்த நிலையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இருக்கும் எனவும், இவற்றில் எக்காரணங்கள் கொண்டும் மாற்றம் செய்யக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இச்சட்டத்தின்படி நாட்டின் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் இருக்கும் என்பதை கடந்த நவம்பர், 2019-இல் பாபர் மசூதி மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், வாராணசியின் சிவில் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கின் மனுவை உடனடியாக அதன் நீதிபதி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். மாறாக அம்மனுவை விசாரணைக்கு ஏற்றதுடன் மசூதியினுள் கள ஆய்விற்கும் உத்தரவிட்டு விட்டது. சிவில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் தடை கேட்கப்பட்டது. இம்மனுக்கள் இன்னும் விசாரணைக்கு ஏற்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், மசூதியின் ஒசுகானாவிற்கு சீல் வைக்க சிவில் நீதிமன்றம் இட்ட உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது. இதை நாம் நீதிமன்றத்திடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வழிபாட்டுதலங்கள் பாதுகாப்புச் சட்டப்படி அன்றி, அவை அனைத்தையும் நாம் மாற்றத் துவங்கினால் நாட்டின் பலதையும் மாற்ற வேண்டி இருக்கும். இதனால், நாடு முழுவதிலும் பெரும் பிரச்சினை உருவாகி விடும்.
ஏனெனில், பல கோயில்கள் புத்திஸம் மற்றும் ஜெயினிஸத்தின் கோயில்களை மாற்றி அமைக்கப்பட்டவை. இதற்கான பல முக்கிய ஆதாரங்கள் இன்றும் நம் கண்கூடாக உள்ளன. எனவே, கியான்வாபிக்கு எதிரான அநீதியை எதிர்த்து நம் அகில இந்திய முஸ்லிம் தனிசட்ட வாரியம் சட்டப்படி போராடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் பக்கமாக உள்ள சிங்காரக் கவுரி அம்மன் தரிசன வழக்கு நடைபெற்று வருகிறது. இதை விசாரிக்கும் வாரணாசியின் சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர், மசூதியினுள் கள ஆய்விற்கு உத்தரவிட்டிருந்தார்.
இதில், தொழுகைக்கு முன் கை, கால்கள் கழுவும் ஒசுகானாவிம் நடுவே சிவலிங்கம் இருப்பதாக இந்து தரப்பினர் கூறுகின்றனர். இதை மறுக்கும் மசூதியின் தரப்பு, அது சிவலிங்கம் அல்ல, பவுண்டைன் எனும் நீரூற்று என கூறுகின்றனர். இதன் மீது வழக்கின் மனுதாரர்கள் கோரிக்கை ஏற்று, ஒசுகானா உள்ள மசூதியின் ஒரு பகுதிக்கு நீதிமன்றம் சீல் வைக்க நேற்று உத்தரவிட்டது. இதுவே, தற்போது சர்ச்சைக்கு காரணமாகி விட்டது.