லக்னோ: கியான்வாபியில் கள ஆய்வு செய்த ஆணையர் அஜய் குமார் மிஸ்ராவை நீக்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உதவி ஆணையர்களுக்கு மூன்று நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயிலை அடுத்துள்ள கியான்வாபி மசூதியில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தரிசிக்க அனுமதி வழங்கக் கோரிய வழக்கு, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதில் மசூதியினுள் கள ஆய்வு நடத்த சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மூன்று தினங்களாக நடந்து வந்த கள ஆய்வு நேற்றுடன் (திங்கள்கிழமை) நிறைவடைந்தது. அப்போது, மசூதியினுள் தொழுகைக்கு முன் கை, கால்களை கழுவும் ஒசுகானாவில் சிவலிங்கம் இருப்பதாகப் புகார் எழுந்தது.
அதனைப் பாதுகாக்க ஒசுகானாவை சீல் வைத்து, 20 பேருக்கும் அதிகமானவர்களை தொழுகைக்கு அனுமதிக்கக் கூடாது என்றும், புதிதாக மனு ஒன்று நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. இந்து தரப்பின் வழக்கறிஞரான ஹரி சங்கர் ஜெயின் அளித்த இந்த மனுவை நீதிபதி ரவி குமார் திவாகர் ஏற்றிருந்தார்.
அதேசமயம், முஸ்லிம்கள் தெரிவித்த ஆட்சேபம் மீது இன்று (செவ்வாய்கிழமை) மாலை விசாரணை நடத்தப்பட்டது. இதில் மசூதி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபய் நாத் யாதவ், கள ஆய்வு செய்த ஆணையர் அஜய் மிஸ்ரா மீது கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார். அவர் நடுநிலையாக இல்லாமல், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் புகார் அளித்தார்.
அதனை ஏற்றக்கொண்ட நீதிபதி ரவி குமார், கள ஆய்விற்கு தலைமை ஏற்றிருந்த ஆணையர் மிஸ்ராவை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும், கள ஆய்வின் அறிக்கையை உதவி ஆணையர்களில் ஒருவரான விஷால் சிங் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து உதவி ஆணையர் விஷால் சிங் சார்பில் அறிக்கை தாக்கலுக்கானக் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு மூன்று நாள் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கை மே 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக, சீல் வைக்கப்பட்ட மசூதியின் ஒரு பகுதியிலுள்ள சிவலிங்கத்தை அளக்கவும், ஒசுகானாவை சுற்றியுள்ள சுவர்களை உடைக்கவும் அனுமதி கோரப்பட்டது. இதன் மீது மசூதி நிர்வாகிகளின் பதிலை பெற்ற பின் முடிவு எடுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
நீதிமன்றத் தடையை மீறி, கள ஆய்வுத் தகவல்களை ஆணையர் அஜய் மிஸ்ரா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது அவரது நீக்கத்திற்கான முக்கிய காரணமாகிவிட்டது.