புதுடெல்லி: கியான்வாபி பள்ளிவாசலுக்குள் முஸ்லிம் வழிபாட்டாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள வாரணாசி நீதிமன்ற உத்தரவு ஒருதலைபட்சமானது என்றும் இந்த உத்தரவு நீதியின் நலனுக்கு எதிரானது என்று பாப்புலப் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தேசியத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது: பள்ளிவாசல் குளத்திலிருந்து சிவலிங்கத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் கூற்றின் உண்மைத் தன்மையை சரியான முறையில் ஆராய்வதற்கு முன்பே அதனை நீதிமன்றம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. முஸ்லிம் வழிபாட்டாளர்கள் நுழைவதற்கும், அங்கு சுத்தம் செய்வதற்கும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இது விசித்திரமானது.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த, உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் நீதிமன்றத்தின் உத்தரவு நீதியின் நலனுக்கு முற்றிலும் எதிரானது. பள்ளிவாசல் மீதான இந்து கட்சிகளின் உரிமை கோரல்களுக்கு நீதிமன்றம் பக்கபலமாக இருப்பது போல் தெரிகிறது. நீதித்துறையின் இத்தகைய நிலைப்பாடு நாட்டில் உள்ள மதநல்லிணக்கத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.
வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991-ஐ கடுமையாக மீறிய இந்த மனுக்களை நீதிமன்றம் முதலில் பரிசீலித்திருக்கவே கூடாது. இந்த ஒட்டுமொத்த வழக்கும் இந்துத்துவா சக்திகளை அதிக சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் மீது உரிமை கோர ஊக்குவிக்கும் வகையில் நடந்து வருகிறது. நீதி மற்றும் மத நல்லிணக்கத்தை விரும்பும் எல்லோருக்கும் இந்த உத்தரவு ஆழ்ந்த கவலை அளிக்கிறது. நீதிமன்றம் இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.