மண்ணுலகில் அவ்வப்போது சில ஆச்சரியங்கள் நிகழ்ந்தாலும், விண்ணுலகில் நிகழும் சிறு மாற்றங்கள், ஆச்சரியங்கள் பெரியளவில் வியப்பை ஏற்படுத்தும். அதேநேரத்தில் மனிதகுலத்துக்கு ஆபத்து ஏற்படவும் இதனால் அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் தான் இந்த மாற்றங்கள் பெரியளவில் கவனிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், குஜராத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் உள்ள டாக்ஜிபுரா மற்றும் சில கிராமங்களில் சில நாட்களுக்கு முன்பு வானில் இருந்து உருண்டை வடிவ நான்கு உலோகங்கள் விழுந்தன. இந்த உலோகங்கள் 1.5 அடி விட்டம் கொண்டதாக இருந்துள்ளது. இதனை கண்ட மக்கள் அப்பகுதி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
வானில் இருந்து விழுந்த இந்த பொருட்களால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த உலோகப்பந்துகள் செயற்கைக்கோளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என எண்ணிய போலீசார், இதனை இஸ்ரோ மற்றும் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு எடுத்துச்செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த வானியலாளர் ஜோனதன் மெக்டொவல் மே 12 அன்று பதிவிட்ட ஒரு டுவீட்டில், குஜராத்தில் விழுந்த உலோகப்பந்துகள் சாங் ஜெங் 3பி என்ற சீன ராக்கெட்டின் சிதைவுகளாக இருக்கலாம் என்று கூறினார். இதனையடுத்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம்பெற்றது.
இதுகுறித்து ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பிஎஸ் பாட்டியா கூறுகையில், இந்த உலோகப் பந்துகள் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களில் திரவ எரிபொருளான ஹைட்ராசைனைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருள் தொட்டிகளாக இருக்கலாம் என்று கூறினார்.
வழக்கமாக, ராக்கெட்டில் உள்ள இந்த சேமிப்பு தொட்டிகள் எரிபொருள் முழுவதுமாக உட்கொண்ட பிறகு தானாகவே பிரிந்து தரையில் விழும் வகையில் அமைக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த பொருட்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
newstm.in