சமீபத்தில் உலகளாவிய கிரிப்டோ கரன்சி சந்தை பெரும் வீழ்ச்சியை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு 8000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Terra USD மற்றும் அதன் கூட்டாளியான Luna என்ற இரண்டு பிரபல கிரிப்டோ கரன்சிகளின் வர்த்தகத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்த இரண்டு கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து இருந்த கம்பெனிகள் மற்றும் முதலீட்டாளர்களின் தலையில் துண்டு போட வைத்திருக்கிறது. Terra USD மற்றும் அதன் கூட்டாளியான Luna என்ற இரண்டு பிரபல கிரிப்டோ கரன்சிகளின் வர்த்தகத்தில் அவற்றின் Demand & Supply யின் சமநிலை (Balance) மிக முக்கியம்.
கடந்த சில வாரங்களில் இந்த சமநிலையில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக கருதப்படும் ஏற்ற இறக்கத்தால் இந்த கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து இருந்த முதலீட்டாளர்களிடம் மிக பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இதனால் முதலீட்டாளர்களால் பல பில்லியன் டாலர் மதிப்பிலான டெபாசிட்டுகள் திரும்ப பெறப்பட்டு இந்த கிரிப்டோ கரன்சிகளின் மார்க்கெட் தேவை வெகுவாக குறைந்து இவற்றின் சந்தை மதிப்பு அதலபாதாளத்திற்கு சென்றது.
$139 மதிப்புக்கு விற்ற Luna காயினின் மதிப்பு $0.0001877 என்ற அளவுக்கு பல்டி அடித்தது. அதனால இதன் கூட்டாளியான Terra USD காயினின் மதிப்பு $1 அளவில் இருந்து $0.1248 என்ற வரலாறு காணாத அளவுக்கு பல்டி அடித்து முதலீட்டாளர்களின் தலையில் துண்டை போட்டு இருக்கிறது. உலகளாவிய கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் புகழ் பெற்ற BINANCE என்னும் நிறுவனம் Luna காயினில் செய்திருந்த 1.5 அமெரிக்க பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டின் மதிப்பு வெறும் 3000 அமெரிக்க டாலர் அளவுக்கு வீழ்ந்து மிக பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கிரிப்டோ கரன்சிகளின் மார்க்கெட் வீழ்ச்சி இவற்றை கட்டுப்படுத்தி வந்த (Influenced) ஒரு சிலராலேயே திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று நிதி வல்லுநர்கள் கருதுகிறார்கள். 2012ல் நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடிக்கு இணையாக இந்த கிரிப்டோ கரன்சி வர்த்தக வீழ்ச்சி பார்க்கப்படுகிறது. இந்த இரு கிரிப்டோ கரன்சிகளின் மார்க்கெட் வீழ்ச்சி, பலகாலமாக சந்தையில் மிகவும் ஸ்திரமானது என்று அறியப்படும் BITCOIN கிரிப்டோ கரன்சியின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
நினைத்தபோது யார் வேண்டுமானாலும் ஒரு புது கிரிப்டோ கரன்சியை எந்த கண்காணிப்பும் நெறிமுறையும் இல்லாமல் உருவாக்கமுடியும் எனும் இன்றைய நிலையே இந்த கிரிப்டோ கரன்சி வர்த்தக வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் . இந்த உலகளாவிய கிரிப்டோ கரன்சி வர்த்தக வீழ்ச்சி, இவற்றின் பரவலாக்கத்தை (Centralization), இவற்றின் மீது அரசாங்கத்துக்கு இருக்க வேண்டிய கட்டுப்பாடுகளை பற்றிய விவாதத்தை மீண்டும் விவாத மேடைக்கு கொண்டு வந்துள்ளது.
கிரிப்டோ கரன்சி முதலீடு மற்றும் கிரிப்டோ கரன்சி சார்ந்த வர்த்தக செயல்பாடுகளை கண்காணிக்க முறையாக மத்திய வங்கிகளால் வடிவமைக்கப்பட்ட நெறிமுறைகள் (Regulations) தேவை. கிரிப்டோ கரன்சி சார்ந்த வர்த்தக செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய வங்கிகளால் தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். கிரிப்டோ கரன்சி சார்ந்த வர்த்தக செயல்பாடுகள் மத்திய வங்கிகளால் அடிக்கடி தணிக்கை செய்யபட்டு அதிலுள்ள ரிஸ்குகள் கண்டறியப்பட்டு அரசாங்கத்துக்கு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். தேசிய அளவில் இந்த கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை கட்டுபடுத்தும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும். இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கிரிப்டோ கரன்சிகளில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வது என்பது மிக பெரிய ரிஸ்க். “ரிஸ்க் எடுக்காட்டி ரஸ்க் கூட சாப்பிடமுடியாது” என்ற வடிவேலு வசனத்தை நினைவுகூர்ந்தால் “வடை போச்சே” என்ற வடிவேலுவின் வசனத்தையும் சேர்த்தே நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு சில நம்பிக்கையான முதலீட்டாளர்கள் இந்த கிரிப்டோ கரன்சி சந்தை இந்த பெரும் வீழ்ச்சியில் இருந்து விரைவில் மீண்டு வரும் என்று நம்பலாம். ஆனால் கிரிப்டோ கரன்சிகளின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகள், நம்பகத்தன்மை இவற்றை பற்றி நன்கு உணர்ந்த எந்த ஒரு நிதி ஆலோசகரும் கூடிய விரைவில் கிரிப்டோ கரன்சி சந்தை மீண்டு வரும் என்ற பொய்யான நம்பிக்கையை எந்த ஒரு முதலீட்டாளருக்கும் கொடுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அதனால் முன்பின் தெரியாத கிரிப்டோ கரன்சிகளில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யாதீர்கள். பின்பு அவதிப்படாதிர்கள். அதிலும் “கிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்தால் 1 மாதத்தில் பணம் டபிள், ட்ரிப்பிள் ” போன்ற கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி படுகுழியில் விழாதீர்கள் .
மேலும் இந்த கிரிப்டோ கரன்சிகளின் வீழ்ச்சி இந்த கிரிப்டோ கரன்சிகளை பின்புலமாக வைத்து உருவாக்கப்படும் Metaverse (NFT), DeFI, Web 3.0 போன்ற புதிய டெக்னாலஜி வரவுகளின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குரியதாக்கி இருக்கிறது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.