கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று (மே 17) காலை 1000 கன அடியாக அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், கடந்த 12 நாட்களுக்கு மேலாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, நேற்று மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கேடுத்து ஓடியது. அணையின் அருகே உள்ள மலையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வந்தது. கடந்த 2-ம் தேதி நீர்வரத்து 12 கனஅடியாக இருந்த நிலையில், மழையால், இன்று காலை நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில், அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில் 49.35 அடியாக உயர்ந்தது.
அணையின் நீர்மட்டம் 48 அடியை எட்டினால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். எப்போது வேண்டுமானாலும் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலுார் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, இரவில் யாரும் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அணை மலையில் இருந்து வெளியேறும் தண்ணீரில், அப்பகுதி இளைஞர்கள் மீன்கள் பிடித்து, மகிழ்ந்தனர்.
கொட்டி தீர்த்த மழை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 83.1 மி.மீ., மழை பதிவாகியது. அதே போல், பெனுகொண்டாபுரம், 32.40, தேன்கனிக்கோட்டை, 12, சூளகிரி, 65, ஓசூர் 19, போச்சம்பள்ளி, 36.2, நெடுங்கல் 11.4, ராயக்கோட்டை 11, ஊத்தங்கரை 5, அஞ்செட்டி 5.40, தளி 15 மழை பதிவானது.