திருமலை: கூடுதல் வரதட்சணை கேட்டு பெற்று தராததால் மனைவி மற்றும் மகளை வீட்டின் அறையில் அடைத்து கதவு அருகே சுவர் எழுப்பிய கணவன் குறித்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் புல்லா ரெட்டி, இவரது மகன் ராகவா ரெட்டி, இவரது மனைவி பாரதி. இவர் பிரபல ஸ்வீட்ஸ் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களது மகன் ஏக்நாத். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த குவாரி உரிமையாளர் மகளான பிரக்னாவிற்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக ரூ.75 லட்சம் பணம், நகை தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக கணவன் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரக்னாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு பிரக்னா மற்றும் அவரது மகள் தங்கியிருந்த அறையின் கதவு அருகே, ஏக்நாத் மற்றும் அவரது தாய் பாரதி ஆகியோர் இரவோடு இரவாக சுவரை எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், பிரக்னா மற்றும் அவரது மகள் இருந்த அறைக்கு மின்சாரம் துண்டித்து உணவு மற்றும் தண்ணீர் கொடுக்காமல் இருந்தனர். பிரக்னா மற்றும் அவரது மகள் செய்வது அறியாமல், தனது செல்போன் மூலம் பெங்களூருவில் உள்ள தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக ஐதராபாத் சென்று பஞ்சகுட்டா போலீசார் உதவியுடன் தனது மகள் பிரக்னா மற்றும் பேத்தியை மீட்டார். பஞ்சகுட்டா போலீசில் பிரக்னா அளித்த புகாரில், ‘‘கடந்த 2014ல் ஏக்நாத்துடன் திருமணம் நடந்தபோது, ரூ.75 லட்சம் பணம், ரூ.19.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.35 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் என வரதட்சணையாக கொடுத்தோம். ஐதராபாத்தில் வணிக வளாகம் வாங்குவதற்காக எனது தந்தையிடம் மேலும் பணம் பெற்று வரச்சொல்லி கேட்டனர். ஆனால், அதற்கு நான் பெற்று தராததால், என்னையும் எனது மகளையும் கொடுமைப்படுத்தினார். தற்போது அவர்கள் நாங்கள் தங்கியிருந்த அறை கதவின் அருகே நாங்கள் வெளியே வராதபடி சுவர் எழுப்பி எங்களை கொடுமைப்படுத்துகிறார். கடந்த 10ம் தேதி ஏக்நாத்தும், அவரது பெற்றோரும் என்னை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ய முயன்றனர்’ என தெரிவித்துள்ளார். அதன்பேரில், இதையடுத்து பஞ்சகுட்டா போலீசார் பிரக்னா அளித்த புகாரின் பேரில், ஏக்நாத், அவரது பெற்றோர் ராகவா மற்றும் பாரதி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ராகவா ரெட்டி மற்றும் பாரதி மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தின் கீழ், பேகம்பேட் ஆர்டிஓவிடம் புகார் மனு அளித்துள்ளனர்.