லாகூர் : ”பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தந்தால், அவருக்கு பிரதமரை விட அதிக பாதுகாப்பு தரப்படும்,” என, ஆளும் பாக்., முஸ்லிம் லீக் கட்சியின் துணை தலைவர் மர்யம் நவாஸ் சவால் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் பாக்., பார்லி.,யில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கான், தன்னை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ”பாக்., உடன் ஒரு வெளிநாடு இணைந்து உருவாக்கியுள்ள இந்த சதித் திட்டத்தில் தான் இறந்தால், சதிகாரர்களின் விபரங்களுடன் ஒரு ‘வீடியோ’ வெளியிடப்படும்,” என இம்ரான் கான் கூறிஉள்ளார்.
அந்த வீடியோவில் தான் குறிப்பிட்டுள்ள சதிகாரர்களை கைது செய்யும் வரை மக்கள் ஓயக் கூடாது எனவும், இம்ரான் கான் வலியுறுத்தி உள்ளார்.இதற்கிடையே இம்ரான் கான் குற்றச்சாட்டு குறித்து, பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மர்யம் நவாஸ் கூறியதாவது:சதி திட்டத்திற்கான ஆதாரங்களையும், சதிகாரர்களின் விபரங்கள் அடங்கிய வீடியோவையும் இம்ரான் கான் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்தால், பிரதமர் ஷெபாஸ் ஷரீப்பிற்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விட இம்ரான் கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
குற்றச்சாட்டு
இந்நிலையில், இம்ரான் கான் தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறும் குற்றச்சாட்டை அடுத்து, பாக்., அரசு அவரின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.இதற்கிடையே, பாக்.,கில் பொதுத் தேர்தல் நடத்தக் கோரி இம்ரான் தலைமையிலான தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி மக்களை திரட்டி தீவிரமாக போராடி வருகிறது.
அமெரிக்காவின் அடிமை பாக்.,
அமெரிக்காவின் தடையை மீறி ஈரான், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதை அமெரிக்கா தடுக்கவில்லை. இதற்கு இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை தான் காரணம். ஆனால், அமெரிக்காவின் அடிமையாக பாக்.,செயல்படுகிறது. இம்ரான்கான், பாக்., முன்னாள் பிரதமர்.