வாஷிங்டன்: கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்புவதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட்.
கடந்த வாரம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு. அதற்காக ஏற்றுமதி கொள்கையிலும் திருத்தம் மேற்கொண்டிருந்தது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மத்திய வர்த்தக துறை தெரிவித்திருந்தது. இந்திய துணைக்கண்டத்தில் நிலவி வரும் அதீத வெப்பத்தினால் வரும் நாட்களில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பார்வையில் இந்த தடை அமல் செய்யப்பட்டுள்ளது. விலையை கட்டுக்குள் வைப்பது மற்றும் நாட்டின் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தடையை முன்னெடுத்துள்ளதாகவும் அரசு தெளிவாக விளக்கி இருந்தது.
இந்நிலையில், அது குறித்து பேசியுள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட். நியூயார்க் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற அவர், “ஏற்றுமதி தடை வேண்டாம் என பல்வேறு நாடுகளிடம் நாங்கள் சொல்லி வருகிறோம். ஏனெனில் இத்தகைய தடை பல்வேறு நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என கருதுகிறோம்.
உணவு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் இந்தியாவிடம் கோதுமை ஏற்றுமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு தெரிவிப்போம். அவர்கள் அதனை நிச்சயம் மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறோம். இந்த கூட்டத்தில் இது குறித்து மற்ற நாடுகள் எழுப்பும் குரலையும் அவர்கள் கேட்பார்கள் என நம்புகிறோம்” என சொல்லியுள்ளார். கோதுமை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.