நியூயார்க் : உலக மக்களின் நலன் கருதி, கோதுமை ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்கும்படி, இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது.
உலகில் கோதுமை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஓராண்டில், கோதுமை விலை, 14 – 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தாண்டு வட மாநிலங்களில் கடுமையான வெப்பக் காற்று வீசுவதால், கோதுமை உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விலை உயர்வதை தடுக்கும் நோக்கில், சமீபத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு கூறியதாவது:ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, உலகளவில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது. ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், உணவு கிடைக்காமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதனால், உணவுப் பொருட்கள் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். ஏற்றுமதிக்கு தடை விதித்தால், உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதால், அதை அமெரிக்கா ஊக்குவிப்பதில்லை.
பரிசீலிக்க வேண்டும்
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக உள்ள இந்தியா, ஏற்றுமதி தடையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின்கவலையை உணரும் என, அமெரிக்கா நம்புகிறது. கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து, இந்தியா பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கட்டுப்பாடு தளர்வு
கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. தடை விதிப்பதற்கு முன், சுங்க இலாகாவில் பதிவு செய்யப்பட்ட கோதுமையை ‘ஆர்டர்’ அடிப்படையில், ஏற்றுமதி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோதுமை சப்ளைக்கு கடன் உறுதி ஆவணங்கள் வைத்துள்ளவர்களும், ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, எகிப்து உள்ளிட்ட சில நாடுகளின் கோரிக்கையை ஏற்று, கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.