கோவையில் 19-ந்தேதி பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கோவை:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர் கண்காட்சி மற்றும் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை(18ந்தேதி) மாலை கோவை வருகிறார்.

விமான நிலையத்தில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது. மேலும் வழி நெடுகிலும் அவருக்கு தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.

வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

நாளை மறுநாள் 19-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

இதனை தொடர்ந்து அவினாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் மு.க.ஸ்டாலின், அங்கு கோவை, திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த தொழில் முனைவோர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடுகிறார்.

கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கார் மூலமாக ஊட்டிக்கு புறப்படுகிறார். இரவு ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் தங்கி ஓய்வெடுக்கிறார்.

பின்னர் 20-ந்தேதி காலை ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, பல வண்ண மலர்களை கண்டு ரசிக்கிறார். பின்னர் ஊட்டி உதயமாகி 200 ஆண்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தையும் திறந்து வைக்கிறார்.

அன்று இரவும் ஊட்டியிலேயே தங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 21-ந்தேதி ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

ஊட்டி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு காரில் கோவை வந்து, பின்னர் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.